உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* கோகிலாம்பாள் கடிதங்கள்

181

எனக்கு வந்த கடிதத்தை விரைந்து பிரித்துப்பார்த்தேன். திருமகளுங் கலைமகளுங் ஓர் உடம்பிற் பிறந்தால் ஒத்த அப்பாரசிகப் பெருமாட்டியாரால் அழகிய தமிழில் அழகிய எழுத்தில் மன மகிழ்ச்சிக்கு ஏதுவான செய்திகள் அதில் அன்போடும் உருக்கத்தோடும் எழுதப்பட்டிருந்தன. அக்கடிதத்தை ஒருமுறைக்குப் பலமுறை திருப்பித் திருப்பிப் படித்துக் களிப்புற்றேன். ஏழையேனிடத்துத் தாய் தந்தையர் அன்பை இழந்து அவர்களாற் கைவிடப்பட்ட எளியேனிடத்துத் தாய்தந்தையரினும் மிக்க அன்பும் உரிமையும் உடையரான அப் பாரசிகப் பெருமாட்டியையும் பெருமானையும் எனக்கு உற்ற துணையும் உதவியுமாய்த் தந்தருளிய எல்லாம் வல்ல சிவபெருமானை உள்ளங்குழைந்துருகிப் பலகால் வாழ்த்தினேன். என் ஆரூயிர்ப் பெருமானே தங்களை யான் மணந்துகொள்ளப் பெறுங்காலம் மிகவும் அணுக்கத்தில் இருக்கிறதென்பதை அக்கடிதத்தால் அறியப் பெற்ற இந்நாளே அந்த மணங்கூடும் நன்னாளாய்த் தோன்றியது! தாங்கள் பக்கத்தில் இருப்பது போலவே என்னை யான் நினைக்கின்றேன்! கண்பெற்ற குருடன் போலவும், பெருஞ் செல்வம் வாய்த்த வறியன் போலவுங் கார்வரவுகண்ட மயில்போலவும், மழை பெற்றவறள் நில மாந்தர் போலவும் யான் இன்றைக்கு எய்திய பெருங் களிப்பினை எனது புல்லிய சொற்களைக் கொண்டு எங்ஙனம் எழுதிக்காட்ட வல்லேன்! என் செல்வப்பெருந்தகையே, என்னையும் என் தமையனையும் உடனே புறப்பட்டுப் பம்பாய்க்கு வரவேண்டு மென்றும், வந்த கிழமைக்குள் நமது திருமணத்தை நடத்த ஏற்பாடு செய்யவேண்டுமென்றும் அவ்வம்மையார் எழுதித் தெரிவிக் கிறார்கள். அவ்வம்மையார் கணவரின் தமையனார் இறந்து போனார். அவர்க்குப் பிள்ளை யில்லாமையால் அவருடைய பொருள் முழுதும் அவர் தம்பியாரும் என் தந்தையினும் மேலானவரும் ஆன அந்தப்பாரசிகப் பெருமானுக்குச் சேர வேண்டுவதாயிற்று. இந்த வகையில் அவர்க்குப் பத்துலட்ச ரூபா சொத்து வருவதாக அப்பெருமாட்டியார் எழுதியிருப்பதைக் கண்டு யான் சொல்லுக்கு அடங்கா மகிழ்ச்சி அடைந்தேன். இப்படிப்பட்ட நல்லோர் கையிற் பொருள் மிகுதியாய்ச் சேர்ந்தால் அஃது எல்லார்க்கும் பயன்படும். மற்றவரிடந் திரண்டபொருள் இருந்தால் யாருக்கு என்ன பயன்! அவர்களிடம் இருக்கும் பொருளும் நிலத்தினுள் எவர்க்குந் தெரியாமலிருக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/210&oldid=1582241" இலிருந்து மீள்விக்கப்பட்டது