உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190

மறைமலையம் -14

அவர்களை மீட்டுக்கொண்டு வந்து தங்களையுங் காணும் நல்வினை உடையேனோ இல்லையோ! ஆயினுந், தாங்கள் கவலைப்படாமலிருக்க வேண்டுகின்றேன். எல்லாம் வல்ல நம்மிறைவனருள் நமக்குத் துணையிருந்தால் பொல்லாத மனிதர் செய்யுந் தீங்குகள் நம்மை அணுகமாட்டா; அவை அவர்களையே திரும்பிச் சென்று பற்றும். நாங்கள் புறப்படுவதற்கு இன்னும் நான்கு மணி நேரங்கள் இருக்கின்றன. தாம் தம்மை மறந்த துயரத்தில் ஊண் உறக்கமின்றியிருந்தமையால் அந்த அம்மையார் இங்கே எங்கட்கு எதிர்பாராமல் நேர்ந்த இடர்களைத் தங்கட்குத் தெரியப்படுத்துவதற்குக் கூடாமற் போயிற் றென்றும், ஆதலால் நடந்த அவ்வளவுந் தங்கட்கு விரிவாய் நான் எழுதவேண்டுமென்றும் இப்போதுதான் தெரிவித்தார்கள். எங்கட்கு நேர்ந்த இடர் இன்னும் முற்றுந்தீராமையால், அது தீர்ந்த பிறகு எல்லாம் விரிவாய் எழுதலாமென்று நினைத்தேன். ஆனால், அம்மையார் சான்னதிலிருந்து இன்னும் நேரமிருப்பதால் முற்றுந் தெரிவிக்கலாமென்றே துணிந்தேன். இன்றை இரவு நாங்கள் போகுமிடத்தில் நாங்கள் ஒருமிக்க மடியும்படி நேர்ந்தாலும், முன் நடந்தவைகள் தங்கட்குத் தெரியவேண்டுவது நலமென எண்ணினேன். ஆகையால், என் தமையனும் யானும் பம்பாயில் வந்து இறங்கின நேரம் முதல் நேர்ந்தவைகளை இங்கு எழுதுகின்றேன்.

உடனே

வாடிச்சந்திப்பில் எதிர்பார்த்தபடியே தாங்கள் வந்து தங்கள் திருமுகத்தைக் காட்டி என்னைப் பெருங்களிப்பில் முழுகச் செய்தீர்கள். எம்பெருமானே, தங்களோடு சிறிது பேச வேண்டுமென என்னுள்ளம் மிகவிழைந்தும், அதனை என் தமையன் குற்றமாக நினையானென்பதனை யான் செவ்வையாகத் தெரிந்திருந்தும் அப்போது எனக்கு உண்டான களிப்பும் அதனோடு கலந்து தோன்றிய நாணமும் என் நாவை அசையவொட்டாமற் பூட்டி விட்டன. தாங்கள் என் உடம்பின் நலத்தைப் பற்றி வினவியும் அதற்குங்கூட விடைசொல்ல மாட்டாமல் புன்சிரிப்போடு இருந்து விட்டேன். அப்போ தென்நிலையையறிந்த என் தமையன் தன்னோடு பேசும்படி தங்களைத் திருப்பிக்கொண்டான். தங்கள் வினாவிற்கு யான் விடை கூறாததைப் பற்றித் தங்கள் உள்ளம் வருந்துமோ என்று வருத்தமும் அச்சமும் ஊடேஊடே கொள்ளப் பெற்றேன். ஆயினும், தாங்கள் என் தமையனிடம் அன்புடன் அளவளாவிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/219&oldid=1582316" இலிருந்து மீள்விக்கப்பட்டது