உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216

மறைமலையம் -14

விட்டு அவர்களை வாழ்நாள் முழுதும் பெருந் துன்பத்திற்கு ஆளாக்குதல் தெய்வத்திற்கு அடுக்குமா? இந்த இந்தியநாட்டில் தவிர வேறு அயல்நாடுகளில் எங்கும் இப்படிப்பட்ட கட்டுப்பாடுகள் இருப்பதாகத் தெரியவில்லையே. அந்த அயல்நாட்டவர்களில் ஆண்பாலாரும் பெண்பாலாருந் தாந் தாம் அன்பு பாராட்டியவர்களை மணந்து கொண்டு இம்மையிற் பெறவேண்டிய எல் லாநலங்களையும் பற்று இனிது வாழ்கின்றார்களென்று கேள்விப்படுகின்றேன். ஒரு பெண் தனக்கு இசையாத ஒருவனை மணப்பதனாலும், ஓர் ஆண் தனக்குப் பொருந்தாத ஒருத்தியை மணப்பதனாலும் உலகத்தில் அளவிறந்த துன்பங்களும் பழி பாவங்களும் நேர்கின்றன. இறைவனால் வகுக்கப்பட்ட இவ்வாண் பெண் சேர்க்கையை மனிதர்கள் தத்தம் நன்மையைக் கோரி இயற்கைக்கு மாறாக மாற்றினால் அதனாற் பல பெருந்தீமைகள் விளையாது ஒழியுமோ? கடவுளே அன்புவடிவாயிருக்கின்றாரென்றால், அவ்வளவு தெய்வத் தன்மை வாய்ந்த அன்பு ஒருவர்மேல் ஒருவர்க்கு இயற்கை யாகத்தோன்ற அவ்விருவரும் அதனாற் பொருந்தப் பெறுதலைத் தடுக்க எவராலும் ஆகுமோ? இருவர் தமக்குள் தோன்றிய அவ் வன்பைப் பழுதுபடுத்தும் வண்ணம் பொல்லாத இடையூறுகள் தோன்றினாலும், தமது அன்பு பழுதுறாமல் அதனை யுடையோர் தமது ஆவியையுந் துறக்கவேயன்றோ காண்கின்றோம்? மக்களினுங் கீழ்ப்பட்டனவாக எண்ணப்படும் விலங்கினங் களுள்ளும் ஆண்பெண் ஆவன தத்தமக்கு இசைந்தவற்றோடு கூடியேயன்றோ களிக்கின்றன? இவ்வாறு உலக இயற்கையிற் காணப்படும் இவ்வாண் பெண் சேர்க்கையின் நுணுக்கத்தை ஆராய்ந்து பாராமலும், ஆராய்ந்து பார்த்து அதற்கேற்ற ஏற்பாடுகளைச் செய்யும்படி வற்புறுத்தாமலும், அதுசெய்தாற் குற்றம் இதுசெய்தாற்குற்றம் என்னும் நீதி நூல்களை மட்டும் நம் முன்னோரிற் கற்றவர்களாய் இருந்தோரும் எழுதிவைத்து மாண்டார்கள்! அவர்கள் எழுதிவைத்த நீதி நூல்களால் ஏதேனும் நன்மை விளைந்ததா? எத்தனையோ எத்தனையோ ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் நீதிநூல்கள் எழுதப்பட்டுங் கற்கப் பட்டும் வந்தும் அவற்றால் விலக்கப்பட்ட குற்றங்கள் இல்லாமற் போய் விட்டனவா? ஒரு சிறிதும் இல்லையே. அந்த நீதி நூல்களால் இதுவரையில் ஏதேனும் நம் நாட்டிற்கு நன்மைவிளைந்த துண்டாவென்றால் அதுவும் இல்லை. அவற்றால் நன்மை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/245&oldid=1582527" இலிருந்து மீள்விக்கப்பட்டது