உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோகிலாம்பாள் கடிதங்கள்

221

பிராணிகளின் ஊடும் நீங்கள் வழிதெரிந்து செல்வது சிறிதும் முடியாது. இங்குள்ளவர்கள் வெளியே செல்வதும், வெளிப்பிர தேசங்களிலுள்ளவர் இங்கே வருவதும் எளிதில் இயலாமை யினாலேதான், இந்தத் திருடர்கள் அரசாங்கத்தினராற் பிடிபடாமல் சுகமாகக் காலங்கழிக்கின்றனர். ஒருகால் நீங்கள் இந்தக் குகைகளைத் தப்பி வெளியே சென்றாலும் இந்த மலைநாடெங்கும் அலைந்துதிரியும் இந்தத் திருடர்கள் மறுபடியும் உங்களைப் பிடித்துக்கொண்டு வருவார்க ளென்பது நிச்சயம். ஆகையால், இவர்களைக் கொண்டே நயமாக இவ்விடத்தை விட்டுப்போக முயல்வது தான் நலம்.” என்றார்.

இவர் சொல்லியவைகளைக் கேட்டு யான் அச்சமும் நடுக்கமுங் கொண்டாலும், இவர் எங்களுக்கு நன்மைசெய்யும் எண்ண முடையவராயிருப்பதைத் தெரிந்து மகிழ்ச்சியும் அடைந்தேன். பிறகு யான் ஒன்றும் பேசாதிருக்க அவர் சாயங்காலந் திரும்ப வருவதாகச் சொல்லிவிட்டு, அக் குகையின் புறத்தே மெல்லச் சென்று கதவை இழுத்துச் சாத்தித் தாழிட்டுக் கொண்டு போய் விட்டார். அவர் போனதும், அவருக்கும் எனக்கும் நடந்த பேச்சின் வகைகளெல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக என் நினைவிற்றோன்றி என் உள்ளத்திற் பலவேறு நிகழ்ச் சிகளைப் பிறப்பித்தன. பொதுவாக அப்பெரியவரைப் பற்றிய நல்லெண்ணம் என்னை இடை இடையிடையே ஆறுதல் பெறச் செய்தது. ஆனாலும், அந்தப் பாரசிகப்பெருமானும் என் தமையனும் என்பொருட்டு இத்தகைய பெருந் துன்பத்தில் அகப்பட்டிருப்பதும், ஏழைப் பெண்பாலாகிய யான், காமங்கொண்ட பொல்லாத ஒரு கள்வன் கையிற் சிக்கியிருப்பதும்,

இவ்விடத்தை விட்டு மீள்வதற்கு ஏதொருவழியுங்

காணாமலிருப்பதும் நினைக்க நினைக்க என் நெஞ்சை ஆறாத் துயரத்திற்கு ஆளாக்கியது. இப்போது இக் குகையினுள்ளிருக்குங் காளிகோயிலின் வாயிற்கதவு பூட்டப் படவில்லை. அதனால், யான் உட்சென்று அம்மையின் திருவுருவத்தின் இரண்டு திருவடிகளிலும் வீழ்ந்து கண்ணீர் ஆறாய்ப் பெருக்கி என் குறைகளைச் சொல்லி அழுதேன். “எல்லா உயிர்களையும் வருந்தாது பெற்றுக் காத்துவரும் இரக்கமுள்ள தாயே! ஏதொரு குற்றமுஞ் செய்யாத ஏழையேனையும், ஏழையேனுக்குத் துணையும் உதவியும் ஆன என் தமையனையும் பாரசிகப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/250&oldid=1582532" இலிருந்து மீள்விக்கப்பட்டது