உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222

மறைமலையம் -14

நீ

பெருமானையும் இந்தப் பொல்லாத கள்வர்கையில் ஒப்பித்து விட்டு, அருட்கடலாகிய நீ ஏதும் அறியாதவள்போற் சும்மா இருத்தல் நன்றோ! பெற்றபிள்ளையைத் தாயே பாதுகாவாமற் கைவிட்டுக் கொலைஞர் கையில் ஒப்பித்தால், ‘எம் பெருமாட்டி, அப்பிள்ளை பிழைக்குமாறு எங்ஙனம்! கொடிய இக் கள்வர் செய்யும் வழிபாட்டையும் ஏற்று அவர்க்கு உதவியாய் நீயும் இங்கிருத்தல் சாலுமோ! தான் பெற்ற பிள்ளைகளுட்

கொடுமையுள்ள சிறுவர் அமைதியான மற்றச் சிறுவர்களை அடித்தாலும் வைதாலும் தாயானவள் அதனைக்கண்டு மனம் பொறாமல் அக்கெட்ட பிள்ளைகளை ஒறுக்கின்றனளே! உலகத்தின்கண் உள்ள சிற்றறிவுடைய தாய்க்குள்ள இரக்கமுங் கவலையுங்கூட எல்லா உலகத்திற்குந் தாயான உன்னிடத்து இல்லாமற் போனால் இனி இப்பாழுலகம் நிலைக்குமோ!" என்றெல்லாம் பலவாறு புலம்பி அழுதேன். இவ்வாறு நைந்தழுதபின் என்மனம் ஒருவாறு அமைதியுற்றது. அம்மைக்குப் பின்புறத்தே ஓவாது விழும் அருவியோசை எனக்கு இரங்கி என்னோடுகூடி அழுவது போற்றோன்றிற்று. பிறகு அம்மையை வலம்வந்து வணங்கிப், பின்னே சென்று அவ்வருவிநீர் தேங்குஞ் சிறுகுட்டத்தில் என் முகத்தைக் கழுவிக்கொண்டு அதனோரத்தில் உட்கார்ந்து, அவ்வருவிநீர் மேற்கூரையாயுள்ள பாறையின் பிளவிலிருந்து இறங்குதலையும், இறங்கிய நீர் கீழுள்ள குட்டத்தில் நிரம்பி அடியேயுள்ள மற்றொரு பிளவினூடு செல்லுதலையும் உற்றுநோக்கிக்கொண்டிருந்தேன். 'இவ்வளவு நெருக்கமான இந்த மலைகளினிடையே யிருந்து இவ்வளவு நீர் எவ்வாறு வருகின்றது! வந்து வழியும் நீர் அவ்வளவுந் திரும்ப எவ்வாறு செல்கின்றது!' என்று வியப்புடன் எண்ணமிட்டுக் கொண் டிருந்தேன். 'தண்ணீர் நிறைந்து ஓடும் இவ் வருவிக்கால் இம்மலைகளைக் கடந்து செல்வதற்கு ஒரு வழியாயிருந்தால் ஏழையேன் இப் பொல்லாத இடத்தைவிட்டு மீண்டு செல்வது எளிதாயிருக்குமே! இவ் வருவிக்கால் ஆழம் உள்ளதாயும், செங்குத்தான மலைகளின் மேலோடிக் கீழ் இறங்குவதாயும். இருந்தால் யான் இதன் வழியே எவ்வாறு செல்லக்கூடும் மேலும் போகப் போக இது செல்லும்வழி குறுகலாயும் நெருக்கமாயும் இருந்தால் யான் இதனைவிட்டுச் செல்வது சிறிதும் இயலாதே!’ என்று இவ்வாறெல்லாம் எண்ணமிட்டுக்கொண்டிருந்தேன். இவ்வாறான பல நினைவுகளில் என் மனம் அழுந்தி நின்றமையால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/251&oldid=1582533" இலிருந்து மீள்விக்கப்பட்டது