உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோகிலாம்பாள் கடிதங்கள்

229

புழுவெனத் துடித்து ஆற்றொணாத் துயரம் எய்திற்று. அதனால், இப்போது அம்மையை வேண்டிக் கொள்ளுதலும் விட்டுக் கண்ணீர் வடித்த படியாய் நின்றேன். பூசனை முடிந்தபின் அப்பெரியோர் இருவரும் எனக்குப் பலவகையான ஆறுதல் மொழிகளைச் சொல்லி, இறைவிக்குப் படைத்த பாற்சோறும் பழங்களும் உண்ணும்படி வற்புறுத்தினர். வேண்டா விருப்பாய் சிறிதெடுத்து அயின்றேன். மாலை ஏழெட்டு நாழிகையாயிற்று. மசங்கல் மாலைப் பொழுதிலேயே அப் பெரியவர் குகைவாயிற் கதவைச் சாத்தித்தாழிட்டார். அவர் அதனைச் சாத்திய குறிப்பைச் சிறிதுநேரத்திலெல்லாந் தெரிந்துகொண்டேன். பகல்முழுதும் வெளிவராது தத்தம் இருப்பிடங்களில் ஒடுங்கிக்கிடந்த கொடிய காட்டுவிலங்குகள் எல்லாம் இரைதேடும்பொருட்டு வெளிப் பட்டுப் பலவகை இரைச்சலிட, அவ்வோசை குகையினுள் ளிருக்கும் எங்கள் காதில் விழுந்து எனக்குப் பெரியதோர் அச்சத்தினை விளைவித்தது. இவ்வளவு திகிலான இந்த மலைநாட்டை விட்டு அகலும் வகை எப்படி என்னும் ஏக்கம் எனக்கு வரவர மிகுவதாயிற்று.என்னுடனிருந்த முதியோரிருவரும் பற்பலவற்றைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். எனக்கிருந்த மனவருத்தத்தால் அவர்கள் பேசியவைகளிற் பெரும்பாலும் என்மனம் பதியவில்லை. இடையிடையே அவர்கள் பேசியவற்றிற் சிற்சில எனக்கு ஒருபெரிய ஐயப்பாட்டினை விளைவித்த தென்றாலும் அப்போது எனக்கு இருந்த மனநிலை யானது அவர்கள் சொல்லியவற்றையெல்லாம் ஒரு தொடர்புபடுத்திப் பார்க்கவும், அவர்களை நன்றாய்க் கேட்டு என் ஐயப்பாட்டை விலக்கிக் கொள்ளவும் இடந்தராதாயிற்று. முற்றிலும் என்னுடைய துயர் நினைவுகளாலேயே என்மனங்கவரப் பட்டிருந்தது. இவ்விடத்தைவிட்டுத் தப்பிப்போவதற்கும், என்னவர்களைச் சிறையினின்று விடுவிப்பதற்கும் வழிவகைகள் உண்டாவென எண்ணி யெண்ணிப் பார்த்தும், இறைவியை மன்றாடியும் ஒன்றும் எனக்குத் தெளிவாய்ப் புலப்படவில்லை. ஆனால், இந்நினைவினூடே ஒன்று மட்டும் அடுத்தடுத்துத் தோன்றிற்று. இறைவிக்குப் பின்புறத்தே விழுந்தோடும் அருவிக்கால் தப்பிப்போவதற்கு வழிகாட்டுமோ என்பதே அதுவாம். ஆனாலும், அது முடியாத பிழைஎண்ணம் என்று நினைத்தேன். பிறகு, தம் அருமைமிக்க கணவனாரைக் கள்வர்கையிற் பறிகொடுத்த அந்தப் பாரசிக அன்னையாரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/258&oldid=1582542" இலிருந்து மீள்விக்கப்பட்டது