உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248

மறைமலையம் -14

அவ்வதிகாரியும் மற்றவர்களும் யான் சொன்னதை ஏற்றுக் காண்டார்கள். இருவர் விழித்திருக்க மற்றையோ ரெல்லாம் விடியும் மட்டும் உறங்குவது நலமென்று தீர்மானித்தார்கள். அக் குகைக்குச் செல்லும் வழியைத் தெரிந்து நாளைக்கு எம்மவரை எப்படிச் சிறைமீட்பதென்னும் நினைவைச் சூழப் பல எண்ணங்கள் ஒன்றன்பின் ஒன்றாய்த் தோன்றி ஓடிக்கொண் டிருந்தமையால் யானும் அம்மையாரும் உறங்க இயலாதென்பது கண்டு, விடியு மட்டும் நாங்கள் இருவருமே விழித்திருப்பதாகக் கூறினோம். ஆகவே, ஆடவர்கள் எல்லாரும் அங்கே நன்றாய்ப்படுத்து உறங்கினார்கள். வழிதுறைதெரியாத இம்மலைநாட்டிலுள்ள அவ்விடத்தைக்கண்டு, பொல்லாத கள்வர் கையிற் சிக்கிய எம்மவரை எவ்வாறு மீட்கப்போகிறோம் என்னும் ஏக்கத்தால் யாங்கள் மனவருத்தம் அடைவதும், பிறகு ஒருவரை யொருவர் தேற்றுவதுமாக அவ் விரவின் மிச்சமுங் கழிந்தது. ஓர் எள்ளளவும் யாங்கள் கண் மூடவில்லை. கிழக்கு வெளுத்தவுடனே அவ் வதிகாரி எழுந்து தாமும், மலைநாடுகளில் திரிந்து கள்வர்கள் பதுங்கும் மறைவிடங்களைத் தெரிவதில் வல்லவரான ஒரு சேவகருமாக வழிகண்டு வரும்பொருட்டுப் புறப்பட்டார்கள். யாங்களும் மற்ற ஆடவர்களுங் கீழேயோடும் அருவி கட்புலனாகும் வரையில் அவர்களோடு கூடவே சென்று அங்கோரிடத்தில் இருக்க வேண்டு மென்றும். அவ் விருவரும் வழி தெரிந்து மீண்டபின் எல்லாருமாய் ஒன்று சேர்ந்து செல்ல வேண்டு மென்றும் முடிவு செய்தார்கள். ஆகவே, அம்மலைமேல் ஓரமாகவே அவ் வருவிநீரைப் பார்த்த படியாகக் கிழக்கு நோக்கிச் சென்றோம். சிறிது நேரத்திலெல்லாம் அவ்வருவிநீர் கீழேயுள்ள மலைக்கணவாய் வாயிலிருந்துவரும் இடத்திற்கு அருகில் மேல் மலைமேல் வந்து சேர்ந்தோம். இனி அவ்வருவிநீர் வரும் இடம் சிறிதும் புலப்படவில்லை. அவ் வதிகாரி உடனே தமது சட்டைப்பையிலிருந்து ஒரு கடிதமும் எழுதுகோலும் எடுத்து, யான் சொல்லிய அடையாளப்படி அம் மலைநாட்டின் கண் என்னை அடைத்து வைத்த குகையிருக்க வேண்டும் இடத்தைப் பல கோடுகள் இழுத்து ஒருகோணத்தில் அதனை நிலைப் படுத்திக் குறித்துக்கொண்டார். இம்மலை நாடாகிய ஒரு வட்டத்துக்கு அவ்வருவிநீர் வரும் மலைக்கணவாய் வாயில் ஒரு மையமாக அக்கடிதத்திற் குறித்து வைக்கப்பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/277&oldid=1582568" இலிருந்து மீள்விக்கப்பட்டது