உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250

மறைமலையம் -14

அம்மையாரும் யானும் அங்கே நன்றாய் உறங்கி விட்டோம் உச்சிப்பொழுதில், அம்மையாருடன் வந்த அறுவரில் ஒருவர் வந்து எங்களை எழுப்பிச் சிறிது உணவுகொள்ளும்படி எங்களை வற்புறுத்தவே, அவர்கள் சொல்லை மறுக்க மாட்டாமற் சிறிது உண்டோம்.

காலையிற் சென்றவர்கள் இன்னும் மீளவில்லை.பகலவன் மேற்றிசைச் சரிவில் மெல்ல மெல்ல இறங்கத் துவங்கிவிட்டான். பிற்பகல் மணி மூன்றுமாயிற்று, நான்குமாயிற்று. போனவர் இன்னும் மீண்டுவந்திலர். சாய்ங்காலத்து நிழல்போல எங்கள் மனக் கவலையும் மனத் துயரமும் நீளலாயின! இவ்வளவு நேரமாகியுஞ் சென்றவர் மீளாமை என்னை! என்று யாங்களும் ஒருவரை யொருவர் அடிக்கடி உசாவலானோம்; எங்களுடன் வந்த ஆடவர் எல்லாரும் உசாவலாயினர். மணி ஐந்துமாயிற்று, ஆறுமாயிற்று. மாலைக் காலமும் அணுகியது. பகலவனும் மறைந்து போயினான். நிலவு வெளிச்சமும் வந்துவிட்டது. ‘போனவர் இருவரே யாதலால் பொல்லாத கள்வர் கூட்டத்திற்றான் அகப்பட்டுக் கொண்டனரோ! அல்லது ன்னும் வழி தெரியாமற்றான் அலைகின்றனரோ! என்று பலவா றெண்ணி யெண்ணிக் கவலையடையலானோம். மாலை மணி எட்டு இருக்கும். இந்தியாவின் மேற்கரை யோரமா யிருக்கும் அப்பக்கங்களில் இப்போது மழைகாலத் துவக்கமாதலால், வானத்தின் கட் கரியமாசிகள் இடைக்கிடையே தோன்றி நில வாளியை மறைத்தன. இரண்டு மூன்று நாட்களாய் மழை பெய்யாதிருந்தது எங்கள் நல்லகாலந்தான்! மறுபடியும் மாசுவிலகி நிலவொளி இப்போது பளிச்சென்று எறித்தது. தொலைவில் இருவர் வருவதுபோற் காணப்பட்டது. எங்கள் எல்லார்க்கும் பெரியதோர் ஆறுதல் பிறந்தது. கண்களுக்குத் தென்பட்ட அவ்விருவர் வடிவத்தை யாங்கள் எல்லாம் உற்று நோக்கியவாறாய் இருந்தோம். இறைவனருளாற் போனவர்கள் இருவரும் மீண்டு வந்தனர். வந்தவுடனே ‘கடவுளருளால் வழி கண்டு வந்தோம்!' என்று மகிழ்ச்சியோடு கூறினர். நாள்முழுதுந் திரிந்து களைப்புற்று வந்தமை நோக்கிச், சமையல் செய்து வைத்திருந்த உணவை அவர்கள் அருந்தும்படி பரிமாறினார்கள். அவர்கள் அதனையுண்டு இளைப்பாறியபின், அவ்வதிகாரி பின்வருமாறு எங்களை நோக்கிச் சொல்வாரானார்.

L

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/279&oldid=1582571" இலிருந்து மீள்விக்கப்பட்டது