உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260

க்

மறைமலையம் -14

அப்பாரசிகப் பெருமான் காலுங் கையுங் கயிறுகளால் இறுகக் கட்டப்பட்டு அம்மையின் திருவுருவத்திற்கு நேரே கோயிலுக்கு வெளியிலுள்ள சிங்கத்தின் பக்கத்தே நின்றனர்; என் தமையனும் அங்ஙனமே காலுங் கையுங் கட்டப்பட்டு, அவர்க்குப் பின்னே நிறுத்தப்பட்டிருந்தான். அவர்கட்கு எதிரிலே வலிய உடம்பு உள்ளவனான ஒருவன் கூரிய பளபளப்பான வெட்டரி வாள் ஒன்று பிடித்து நின்றான்; அவனுக்குப் பக்கத்திலும் பின்னேயும் பலர் கொடுந்தோற்ற முடையராய் நின்றனர். அவர்களுள் இருவர் அந்தச் சிங்கவடிவமான கற்சிலையை அப்புறம் நகர்த்தும் பொருட்டுக் குனிந்து நின்றனர். இக் கொடுந் தோற்றம். எங்கள் கண்களிற்பட்டது ஒரு நொடிப்பொழுதுதான் இருக்கும். இதற்குள்ளாக அப்பெரியவர் மகன் அங்குநின்ற அக்கள்வர் கூட்டத்தின்மேற் பாய்ந்தான். அவ்வதிகாரி வாயிலில் நின்றபடியே தமது கைத்துப்பாக்கியை எடுத்துப் பிடித்தது தெரிந்தது, அதனையடுத்து இரண்டு வெடி முழக்கங் கேட்டது. இதற்குள் யாங்கள் அக் குகைவாயிலில் வந்தேறினோம். அடுத்த நொடியில் அப்பாரசிகப் பெருமானிடமும் என் தமையனிடமும் யாங்கள் பாய்ந்தடைந்தோம். அம்மையாரும் யானும் அவ்விருவர் கால்கைக் கட்டுகளை யாங்கள் இப்போது வைத்திருந்த கத்தியினால் அறுத்தெறிந்தோம். இவையெல்லாம் நடந்தேறியது ஒன்று அல்லது இரண்டு இமைப்பொழுதுதான் இருக்கும். அவர்கள் கட்டை யறுத்துவிட்டபின் அக்கள்வரிருந்த பக்கமாய்த் திரும்பினோம். அப் பெரியவர் மகனின் பேராண்மையை என்னென்பேம்! இதற்குள் அவன் கள்வர் மூவரை வெட்டி வீழ்த்திவிட்டான். எங்கள் பாரசிகப் பெருமானை வெட்டுவதற்குக் கத்திஏந்தி நின்றவன் அவ்வதிகாரியாற் சுடப்பட்டு வீழ்ந்து கிடந்தான். இப்போது எங்கள் கண்கட்கெதிரே அவ் வதிகாரி மூன்று பெயருடனும் அப் பெரியவர் மகன் மூன்றுபெயருடனும் எதிர்த்துக் கத்திகள் சுழற்றிக் கடும் போர் புரிதலைக் கண்டோம். எங்கள் வாழ்நாளிற் பாராத அக்கொடிய தோற்றம் எங்களுக்குத் திகிலையும் மயக்கத்தையும் விளைத்தது. கட்டறுபட்டதும் எங்கள் பாரசிகப் பெருமான் எங்கள் கையிலிருந்த கத்தியைப் பிடுங்கிக்கொண்டு எதிர்த்துச் சண்டையிடும் அக் கள்வர்கள்மேற் பாய்ந்தார். பின்னும் இருவர் வெட்டுண்டு கீழே வீழ்ந்தனர். இந்நேரத்தில் இருவர் அந்தப் பெரியவர் மகனுடன் மல்லாடக் கண்டோம். அவ்வதிகாரி ஒருவனைக் கீழ்வீழ்த்தி அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/289&oldid=1582584" இலிருந்து மீள்விக்கப்பட்டது