உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோகிலாம்பாள் கடிதங்கள்

261

மார்பின்மேல் மண்டியிட்டிருந்து அவனது கையிலிருந்த கத்தியைப் பிடுங்கவும், அந்தப் பாரசிகப் பெருமான் மற்றொரு வனோடு கத்தி சுழற்றவுங்கண்டு திகிலுற்றோம். இதற்குள் என் தமையன் அந்தப் பாரசிகப்பெருமானுக்கு உதவியாய்ச் செல்லக் கத்தியைக் கையிலெடுக்கையில் எங்கட்குப் பின்னேவந்த எங்கள் ஆட்கள் பதினெட்டுப்பேரும் உள்ளே வந்து நுழைந்து, எங்கட்கு எதிரியான கள்வர்கள் நால்லரையும் பிடித்துக்கொள்ளவே, எங்கள் பாரசிகப்பெருமானும், அவ்வதிகாரியும், பெரியவர் மகனும் மீண்டனர். உடனே, எங்கள் சேவகர்கள் தாம் காண்டுவந்த இருப்பு விலங்குகளை எஞ்சிய அக்கள்வர் நால்வர் கையிலும் பூட்டினார்கள்.

இதற்குள் அந்தப் பெரியவர் மகனின் தோளிலும் முதுகிலும் கத்திகள் கீறி இரத்தம் மிகுதியாய் ஒழுகினமையால், அவற்றைச் சேவகரிற் சிலர் துணியிட்டுக் கட்டலானார்கள். அவ்வதிகாரி தடித்த கம்பளியுடுப்பு அணிந்திருந்தமையாற் கள்வரின் கத்தி வெட்டுக்கு அவர் தப்பிக்கொண்டார். ஆனாலும், அவருடுப்புகள் பெரும்பாலுங் கீறலுற்றுக் கிழிந்தன; அவரதுகையிலுஞ் சிறிது காயம்பட்டது.அதனையும் அவருடன் வந்தோர் கட்டினார். எங்கள் பாரசிகப் பெருமானுக்கும் மார்பில் ஒரு கீறல், அதனை அம்மையாரும் யானும் என் தமையனுந் துணியாற்கட்டிப் பரிகரித்தோம். இவ்வளவு நடந்ததும் ஏழெட்டு நிமிஷந்தா னிருக்கும். இதற்குள் ஆறுபெயர் சின்னாபின்னமாய்ச் சிதைக்கப்பட்டு மாய்ந்தார்கள்! நான்கு பெயர் விலங்கிடப் பட்டார்கள்! எம்மவர் இருவரும் விடுதலைபெற்றார்கள்! மழைநாள் இரவில் அடுத்தடுத்துத் தோன்றும் மின்னல் வீச்சுப்போல், நினைத்தற்கும் அரிய விரைவோடு இவ்வளவும் அத்துணை ரைவில் நடந்தேறின! சடுதியில் வந்த கடும் புயற் காற்று மரங்களையுங் கட்டிடங்களையும் பெயர்த்தெறிதல் மட்டில் அமையாமல், கடல்நீரையுங் கலக்கிக் கொந்தளிக்கச் செய்தல் போலச்,சடுதியில் மூண்ட இப்பெரும்போர் அறுவரை மடித்தது மல்லாமற், பெண்பாலாராகிய எங்களிருவ ருள்ளங்களையுங் கலக்கிப் பலவேறு உணர்வுகளால் அசையச் செய்தது. எதிர்பாராமல் வந்த அப் பெரும்புயல் வந்தவாறே தான் விரைவில் ஓய்ந்துபோக அக்கடல்நீர் அமைதிபெற்றாற் போல எங்கள் உள்ளமும் ஒருவாறு அமைதியுற்றது. என்றாலும், அங்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/290&oldid=1582585" இலிருந்து மீள்விக்கப்பட்டது