உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262

மறைமலையம் -14

வெட்டுண்டு பிணமாய்க் கிடப்பவரையும், அவருடம்பிலிருந்து பெருகிக் கீழேபரவும் இரத்தத்தினையும், அந்தப் பெரியவர் மகனுடம்பிற் பட்ட வெட்டுக் காயங்களையும் பார்க்கப்பார்க்க எங்கள் மனந் திகிலடைந்தது. பாரசிகப்பெருமானையும் என் தமையனையும்யானும் அம்மையாரும் வந்துகட்டறுத்துவிடுகையில், அவர்கள் எங்களை இன்னாரென்று தெரியக்கூடவில்லை. ஏனென்றால், யாங்கள் ஆணுடுப்பில் இருந்த தொன்று; மின்னொளி பாய்ந்தாற் போல் அந்தப் பெரியவர் மகனும் அவ்வதிகாரியும் அக்கள்வரிடையிற் பாய்ந்து அவர்களோடு மலைந்து அவர்களிற் பலரை வெட்டிவீழ்த்தினமை ஒன்று; தம் உயிர் போகுந்தறுவாயில் தெய்வச்செயலாய் இருவர் சடுதியில் வந்து அக்கள்வரோடு போர் இயற்ற இருவர் தம்மைக் கட்டறுத்துவிட அதனாற் பாரசிகப் பெருமானுக்கும் என் தமையனுக்குந் தோன்றிய திகைப்பொன்று; இம்மூன்று காரணங்களாலும், கட்டறுத்த வுடனே பாரசிகப் பெருமான் எஞ்சிய கள்வருடன் போர்புரியப் புகுந்தமையாலும், என் தமையன் தன் கருத்தெல்லாம் இக்கொடிய நிகழ்ச்சியில் இழுப்புண்ணக் கடைசியில் தானுங் கத்தி யெடுத்துச் சண்டையிட முயன்றமையாலும் அவர்கள் எங்களைத் தெரிந்து கொள்ளுதற்கும், யாங்கள் அவர்கட்குத் தெரிவித்துக் கொள்தற்கும் இயலவில்லை. ஆனால், இப்போது யாங்கள் அப் பாரசிகப் பெருமானுடைய காயத்தைக்கட்டிப் பரிகாரஞ் செய்ததும், அம்மையார் அவர் காலடியில் வீழ்ந்து தேம்பித் தேம்பி அழுதார்.யானும் அதனைக் கண்டு பொறுக்க முடியாமல் அழுதேன். அம்மையின் கோயில்வாயிலில் ஏற்றப்பட்டிருந்த சரவிளக்குகளின் ஒளி எங்கள் முகத்தின்மேற் படவே எங்களை உற்றுநோக்கி மிகவும் வியப்படைந்தவராய் முதலிற் றம் மனைவியாரை ஒருகையாற் றூக்கி எடுத்து, மற்றொரு கையால் என் இடதுகையைப் பிடித்துக்கொண்டு ‘ஆ! கமலா, குயந்தே கோகிலா, இதென்னா ஆண்வேஷம்! நீங்க எப்படி இந்தப் பொல்லாத எடத்துக்கு வந்தீங்கோ?" என்று எங்கள் பாரசிகப் பெருமான் எங்களிருவரையும் நோக்கி வினவினார்.

அதற்கு யான் ஒன்றுஞ் சொல்லமாட்டாமற் பின்னும் அழ, அம்மையார் தங் கணவனாரை நோக்கி “என் பெருமானே, குழந்தை கோகிலம் தெய்வத்தினுதவியால் இவ் விடத்தினின்றுந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/291&oldid=1582586" இலிருந்து மீள்விக்கப்பட்டது