உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268

மறைமலையம் -14

யாரை அழைத்து வருதற் பொருட்டு அப்பெரியவர் அக்குகையை விட்டுச் சென்றார். சேவகர்களும் எங்கள் ஆட்களும் ஒருங்கு சேர்ந்து, இறந்துபோன கள்வர்களையுஞ் சேதுராமனையும் உடம்பு முழுதுந் துணிசுற்றி இறுக்கிக் கட்டி, இரத்தக்கறை படாத ஓரிடத்தில் வரிசையாகக் கிடத்தி வைத்து, இரத்தம்பட்ட இடங்களையெல்லாங் கழுவித் துப்பரவு செய்தார்கள். அவ்வதிகாரி தம் சேவகரில் நால்வரைப் பிடிபட்ட கள்வன் ஒருவனோடும் போக்கி இறந்துபோன கள்வரின் மனைவி மக்களையும் பிடிபட்ட கள்வரின் மனைவி மக்களையும் விரைவில் அழைத்துவரும்படி ஏவினார்.

போய் ஒருமணிநேரத்திலெல்லாம் அந்தப் பெரியவர் தம் மனைவியாரோடுங் குகையினுள் வந்தார். உள் நுழைந்ததும் அப்பாரசிக அம்மையார் ஓடிச்சென்று ஆண்டில் முதிய அந்தப் பாட்டியைக் கட்டிக்கொண்டு 'அம்மா' என்று அலற, அந்த பாட்டியும் அவரைக் கட்டிக்கொண்டு 'கண்மணி கமலா' என்று அலற இவ்விருவரது ஆற்றாமையுங்கண்டு என் நெஞ்சம் நெக்கு நெக்கு உருகியது. பின்னர் அவ்விருவருங் குமாரசாமி என்னும் அப்பெரியவர் மகனண்டையிற்போய் அழ, உடனே அவர் கண் விழித்து ‘அழாதே' என்னுங் குறிப்புத் தோன்றக் கையமர்த்தி மறுபடியுங் கண்களை மூடிக்கொண்டார். அப் பெரியவரும் எங்கள் பாரசிகப் பெருமானும் யாங்களும் அவ்விருவரையுந் தூக்கித் தேற்றினோம். அவர்கள் தேறுதல் எய்தி அமைதியுற்றபின் அப் பெரியவர் தம் மனைவியாரை நோக்கிப் “பொல்லாத இக் கள்வரோடு சேர்ந்து சேதுராமனும் இறந்தான்!" என்று துயரத்தோடு கூறினார்.

அது கேட்டதும் அந்தப் பாட்டி மறுபடியும் மனங்கலங்கி “ஐயோ! தன் தாய் தந்தையாரை அறியாமல் நம்மிடம் வளர்ந்து வந்த அவனுமா மாண்டான்” என்று வருந்தி அவன் கிடந்த இடத்திற்போய் அவனைப் பார்த்து நைந்தழுதார். அழுது ஓய்ந்த பின், அவன் பக்கத்தே கிடந்த என் தந்தையாரைப் பார்த்துத் திகிலடைந்து "ஓ! ஓ! இதென்ன கொடுமை, சேதுராமன் பக்கத்தில் சேதுராமன் தந்தையும் மாண்டுகிடக்கின்றாரே! ஐயோ! என் மூத்தமகள் கதி எப்படியாகுமோ!” என்று அலறினார்.

இச்

சொற்களைக்கேட்டதும் யான் அடைந்த வியப்புக்குந் துன்பத்திற்கும ஓர் அளவில்லை. அப் பெரியவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/297&oldid=1582594" இலிருந்து மீள்விக்கப்பட்டது