உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280

மறைமலையம் -14

அவர்கள் பேசி முடியும்மட்டும் இவைகளை யெல்லாம் வியப்புடன் கேட்டுக்கொண்டிருந்த என் உண்மைத் தந்தையா ராகிய அப் பாரசிகப் பெருமான் என்னையும் என் தமையனையும் பிடித்துக் கட்டிக்கொண்டு “என் கண்மணிகளா” என்று தம்மை யறியாமல் தேம்பினார்; என் உண்மைத் தாயாராகிய அந்தப் பாரசிகப்பெருமாட்டியும், அவர் தம் பெற்றோராகிய அந்தப் பாட்டன் பாட்டிகளும் எங்களிருவரையும் வந்து கட்டிக்கொண்டு அங்ஙனமே அழுதார்கள். எனக்கும் என் தமையனுக்கும் அங்ஙனமே பொறுத்தற்கரிய ஆற்றாமை உண்டாயிற்று. எங்களுடன் நிற்குஞ் சேவகர்களும் ஆட்களும் எங்கள் உறவின் நெருக்கத்தைக் குறிப்பினாலுணர்ந்து வியப்புற்றவர்களாய் ஒன்றுஞ் சொல்லாமலிருந்தார்கள். எங்கள் எல்லார்க்கும் ஆற்றாமை ஒருவாறு தணிந்தது. இன்னும் என்னால் ஒன்றும் பேசக்கூடவில்லை. என் தமையன் ஒருவாறு மனந்தேறி “அப்பா, அம்மா, எல்லா இரக்கமும் அருளும் உடைய சிவம் உங்கள் ஏழைப் பிள்ளைகளாகிய எங்களை உங்களுடன் கொண்டு வந்து சேர்த்த அருட்செயலை எண்ணிப் பார்க்கப்பார்க்க, அதற்கு நாம் எங்ஙனங் கைம்மாறு செலுத்தவல்லோம்! என்று என்நெஞ்சம் கரைகின்றது. உலகம் எல்லாம் வருந்தாது ஈன்ற அன்னையாகிய இதோ இங்குநிற்கும் நம் அன்னையின் திருமுன்பில் நம் எல்லாரையும் ஒருங்கு சேர்த்தமையால் இவளை நாம் இப்போது வணங்கி எழுந்து, மாமா அபாயமான லைமையில்

ருப்பதால் அவரை முதலிற் பம்பாய் வைத்தியசாலைக்கு அனுப்புவோமாக!” என்று கூறினான். உடனே நாங்கள் எல்லாரும் எழுந்து சென்று அம்மை திருவுருவத்தின் முன்பு விழுந்து வணங்கினோம்.

அதன்பின், எங்களுடன்வந்த அதிகாரியை என் தந்தையார் அருகழைத்து என் மாமனை இரட்டுத் துணித்தொட்டிலில் வைத்துப், பிடிபட்ட கள்வன் ஒருவன் ஒருவழிகாட்டியாக வர எங்கள் ஆட்களில் ஒருவரும் சேவகரில் இருவருமாய் அவரை முதலிற் பம்பாய் வைத்தியசாலையிற் கொண்டுபோய்ச் சேர்ப்பித்து, வேண்டும் வசதிகளுக் கெல்லாம் பம்பாயில் உள்ள தம் கணக்குப் பிள்ளையிடம் பணம் பெற்றுக்கொள்ளும்படி ஒரு சீட்டும் எழுதிக் கொடுத்தார். அது முடிந்ததுங், குகைக்கு வெளியே சென்ற சேவகர் நால்வருங் கள்வன் ஒருவனும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/309&oldid=1582613" இலிருந்து மீள்விக்கப்பட்டது