உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284

மறைமலையம் -14

என் வளர்ப்புத்தந்தை கள்வர் கூட்டத்திற் சேர்ந்து வெட்டுண்டு இறந்ததைப்பற்றி மட்டும் என் வளர்ப்புத் தாய்க்குத் தெரிவித்து, அவர்களின் பிழைப்புக்கும் என் அருமைத் தங்கையின் மணத்திற்குமாகப் பதினாயிர ரூபா கொடுத்துவிட வேண்டுமேயன்றி இனிச் சென்னைக்குச் செல்லவாவது அறக்கொடியரான எங்கள் பார்ப்பனச் சாதியாரோடு கலக்கவாவது நாம் எட்டுணையும் விரும்பலாகாதென்றும், நாம் அவர்களினின்றும் விலகியவாறே ஒதுங்கிக், கள்ளங்கவடறியா மேன்மக்களான பாரசிக இனத்தாரோடு கலந்தவாறே எல்லாவகையிலுங் கலந்து போக வேண்டுமென்றும் என் பாட்டன் பாட்டியார் வற்புறுத்திச்சொல்ல, நாங்கள் எல்லாரும் அதற்கு மகிழ்வுடன் இணங்கினோம். ஆனால், என்தமையன் மட்டுஞ் சென்னைக்குப் போய்த்தன் மனைவி மங்கைப்பருவம் அடையும் மட்டும் அங்கேயேயிருந்து, பிறகு அவளையும் அழைத்துக் கொண்டு பம்பாயில் எங்களுடன் வந்து சேர்ந்து காள்ளல் வேண்டுமென்பது தீர்மானிக்கப்பட்டது. உடனே என்னருமைத் தந்தையார் தம் முதன்மகனும் என் தமையனுமான சுப்பிரமணியனைக் கொண்டு, என் வளர்ப்புத் தந்தை இறந்த வகையையும், அவர்க்குச் செய்யவேண்டுங் கருமங்களை யெல்லாஞ் செய்துவிட்டு என் தமையன் இன்னும் பத்துநாளிற் சென்னைக்கு வந்து அவர்கட்கு வேண்டும் எல்லா ஏற்பாடுகளுஞ் செய்வான் என்பதையுந் தந்தி வழியாக என் வளர்ப்புத்தாய்க்குத் தரிவித்தார். என் தமையன் தமது திருமணம் வரையில் இங்கே தங்க வேண்டியிருப்பதாலுஞ், சென்னையில் தான் பெற்றுவந்த விடுமுறைநாட்கள் கழிவதற்கு இன்னும் மூன்று நான்கு நாட்களே யிருப்பதாலும் மறுபடியும் இரண்டு வார விடுமுறைக்குக் கடிதம் எழுதியிருக்கின்றான்.

சேதுராமன் தாம் பெற்றமகனே என்பதுஎன் வளர்ப்புத் தாய்தந்தையர்க்கும் அவர் இனத்தார்க்குஞ் சிறிதுந் தெரியாதாகை யால் அவன் இறந்ததைப்பற்றி எவர்க்குந் தெரிவியாமல் விட்டுவிடுதலே நலமென்று என் பாட்டன் பாட்டிமார் கூறியது எங்கள் எல்லார்க்கும் ஒப்பாகவேயிருந்தது. சேதுராமன் தன் தாய்தந்தையார் இன்னாரொன்று தெரியாமலே இறந்தா னெனவும், அவனைப் போலவே அவன் றந்தையும் அவனைத் தன் மகனென்று அறியாமலே இறந்தாரெனவும் என் பட்டன்.பாட்டி கூறினர். அவர்களுடன் சேர்ந்து அம் மலைநாட்டிற் போயிருந்த என் பாட்டனும், மாமனும், என் அன்னை தன் கணவரோடு கூடிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/313&oldid=1582619" இலிருந்து மீள்விக்கப்பட்டது