உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைமலையடிகளார் கடிதங்கள் 4 - அன்பு

297

6-8-43

அன்பிற் சிறந்த திருவாளர்.... அவர்களுக்கு, அன்புடனும் பணிவுடனும் எழுதிக்கொள்ளுங் கடிதம்.

6

5-ஆம் நாள் தாங்கள் அன்பு கூர்ந்தெழுதிய கடிதங்கண்டு தங்களையே கண்டாற்போற் பெருமகிழ்ச்சி அடைந்தேன். பள்ளிக்கூடத்தில் தங்களுடன் நெருங்கிப் பழகிய நேசமானது எந்நாளும் மறக்கப்படுவது அன்று.

தங்களை இடையிடையே பலகாலும் நினைப்பதும் உண்டு ஆனாலும், தங்களைப் பற்றி விளக்கமாகத் தெரிவிப்பார் எவரையும் நீண்டகாலமாகக் காணவில்லை. ஓர் ஆண்டுக்கு முன்னே தான் நம் அன்பர் திரு தியாகராச செட்டியார் வாயிலாகத் தங்கள் நலமறிந்து களிப்புற்றேன். தாங்கள் நமது பழைய நேசத்தை மறவாமல் கடிதம் எழுதிய பேரன்பை நினைந்து நினைந்து மனம் உருகுகின்றேன். எல்லாம் வல்ல ஆண்டவன் திருவருளால் தாங்கள் எல்லா நலன்களுடன் நீடு வாழ்வீர்களாக!

க்

தாங்கள் பத்து ஆண்டுகளாகக் குடல் இறக்கத்தால் வருந்துவது தெரிந்து மிக மனம் உளைகின்றேன். தாங்கள் இன்னும் ஒரு திங்களில் இங்கே வரக் கருதியிருப்பது தெரிந்து சொல்ல முடியாப் பெருமகிழ்ச்சி யடைந்தேன். ஆண்டவன் விரைவில் உங்களை இங்கே கொண்டு வந்து சேர்ப்பிப்பாராக!

தங்களை நேரிற் காணும்போது மருந்தில்லாமலே நோய் நீக்க யான் தெளிந்த எளிய முறைகள் சிலவற்றைத் தங்கட்குத் தெரிவிப்பேன். தாங்கள் எல்லா நலங்களுடனும் இனிது நீடு வாழ நம் நாகூர் ஆண்டவரும் அருள் செய்வாராக!

தங்கள் அன்புள்ள வருகையை எதிர் நோக்கி யிருக்கும்.

தங்கள் பள்ளிக்கூட நண்பன், வேதாசலம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/326&oldid=1582635" இலிருந்து மீள்விக்கப்பட்டது