உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோகிலாம்பாள் கடிதங்கள்

39

ராயிருப்பர்.நான் ஏழுவயதுக் குழந்தையாயிருந்தபோது என்னை நாற்பத்தைந்து வயதுள்ள ஒருவருக்குக் கல்யாணஞ் செய்வித்தது உங்களுடைய அறிவீனமேயல்லாமல், என்னுடைய குற்றம் அன்று. உன் தமையன் எப்படிப்பட்டவரோ எனக்குத் தெரியாது. அவரைக் கண்டபோ தெல்லாம் நான் பயந்து ஓடினது மாத்திரம் எனக்கு ஞாபகத்தில் இருக்கின்றது. அவர் உன்னைப் போலவே பல்நீண்டு உதடு கீழே தொங்கப் பருத்த தொந்தியோடு தலையில் சிறிய தேங்காய்க் குடுமி வைத்துக் கொண்டு அங்கு மிங்கும் போவதைப் பார்த்த போதெல்லாம் நான் மிகவும் நடுநடுங்கி அழுதோடிப்போனதெல்லாம் எனக்குக் கனவுகண்டாற் போல நினைவுக்கு வருகின்றது. எனக்குத் தந்தையைப் போல் இருந்த உன் தமையனோ எனக்கு ஏற்ற மணவாளன்! ஒருவரையொருவர் பேரன்போடு நேசித்து இருவரும் ஓருயிராய் ஒருவராக மருவிப் பிறர்க்குத் தீங்கில்லாத வழியிலே தாம் அனுபவிக்க வேண்டிய இன்பங்களையெல்லாம் அனுபவித்துக் கொண்டு, உலகத் திலுள்ள எல்லா உயிர்களுக்கும் உதவி ஒத்தாசை முதலான பல நன்மைகளைச் செய்து வாழ்பவர்கள் அல்லரோ மணவாளனும் மணவாட்டியும் என்று சொல்லப்படுவார்கள்? இவர்களுள் ஒருவர் ஒருவரைப் பிரிந்து வினைவசத்தால் இறந்தாலும் மற்றவர் தமது நேசத்தினின்றும் மாறுபடமாட்டார்; மனைவி இறந்தால் அன்புள்ள கணவன் அவளையே நினைந்தவனாகி வேறொருத் தியைக் கனவிலும் நாடானாய் வேறு இன்பங்களையும் விரும் பானாய்க் கடவுளையே தொழுதுகொண்டு தன் வாழ்நாளைக் கழிப்பன்; கணவன் இறந்தால் அன்புள்ள மனைவி அவனையே நினைந்தவளாகி வேறோர் ஆண்மகனைக் கனவிலும் நினையாளாய், வேறு எவ்வகை இன்பங்களையும் கருதாளாய்க் கடவுளையே தொழுதுகொண்டு உயிரற்ற வெற்றுடம்பு போல் தன் நாட்களைக் கழிப்பள். அப்படிப்பட்டவளின் மயிரைச் சிரையாமலே அவள் மயிர் அழகிழந்து போகும்; விலையுயர்ந்த ஆபரணங்களையும் பட்டாடைகளையும் பிறர் கொண்டுவந்து அவளை அலங்கரிப்பினும் அவள் அவற்றில் நாட்டம் சிறிதுமின்றி அவற்றை அருவருத்துவிடுவள்; அவளுடம்பு ஊண் உறக்கமுங் கொள்ளாமல் மெலிந்து பொலிவிழந்து போகும்; அவளுடைய அழகைக் குலைக்கப் பிறர் எவரும் வேண்டாம்; அவள் நினைவே அதனைச் செய்யப் போதுமானது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/68&oldid=1582026" இலிருந்து மீள்விக்கப்பட்டது