உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோகிலாம்பாள் கடிதங்கள்

45

களையோ நாமே முயன்று முன்னுக்குக் கொண்டுவரல் வேண்டும். இதுவோ தானாகவே முன்றோன்றி முதன்மை பெற்று விளங்குகின்றது.காதலரிடத்தே நிகழும் நினைவின் ஒருமையும், அடியார்களிடத்தே தோன்றும் நினைவின் ஒருமையும் எவ்வகையாலும் ஒத்திருக்கின்றன. இதனாலன்றோ மாணிக்க வாசகப் பெருமான் சிவபரம் பொருளிடத்து அடியார்க்கு நிகழும் அன்பின் நிகழ்ச்சிகளைக் காதலர் மாட்டு நிகழும் அன்பின் நிகழ்ச்சிகளோடு ஒப்பவைத்துத் திருச்சிற்றம்பலக் கோவையார் என்னும் அருமை மிக்க நூலை அருளிச் செய்திருக் கின்றார்.உம்முடைய நினைவு எனக்குத் தோன்றும்போதெல்லாம் சொல்லுக்கு அடங்கா ஆனந்தம் விளைகின்றது; ஆனால், அதன் பக்கத்தே உம்மைப் பிரிந்திருத்தலால் ஆற்றாமையுந் தோன்றி என்னைத் துயரப் படுத்துகின்றது. அடியார்கள் சிலர் தம் ஆண்டவனை நினைத்து ஆனந்தப்பட்டு, அவ்வளவோடு அமையாமல் அழுது அழுது வருந்தியதைச் சிற்சில சமயங்களில் யான் கண்டபோது ஆனந்தப்படும் இவர்கள் அழுது வருந்துவது ஏன்? என்று எனக்குள் யான் பலமுறை வினவியும் அதன் உண்மை அப்போது சிறிதும் எனக்கும் புலப்படவில்லை. இப்போதோ என்னிடத்து நிகழும் அனுபவத்தைக் கொண்டு அதன் றன்மை இதுதான் என்று உணரப்பெற்றேன். உம்மை நினைக்கும் போதெல்லாம் என்னுள்ளம் ஆராக்களிப்பினால் துளும்பு கின்றது. உடனே உம்மோடு அளவளாவி ஒன்றாயிருக்கப் பெறாமல் வேறா யிருந்தலால் நெஞ்சந் துடித்து ஆற்றாது அழுகின்றேன். அடியார்களுந் தமது ஆண்டவனை நினையுந் தோறும் ஆரா மகிழ்ச்சியும் அவனை அணைந்து பிரியாதிருக்கப் பெறாமையால் ஆராத்துயரமும் அடைகின்றார்கள் என அறிந்தேன். என் அருந்துணையே, உண்மையன்பில் அகப்பட்ட காதலர்க் கல்லாமற் பிறர்க்கு ஆண்டவன் அன்பின் றிறங்கள் சிறிதும் புலப்படமாட்டா என்பதும் தெரிந்து கொண்டேன். இங்ஙன மெல்லாம் என் சிந்தனையானது காதலின் வசப்பட்டு அதன் இயல்புகளைச் சிந்தித்த வண்ணமாய் நிலைபெறவே,யான் சிறிது நேரம் என்னை மறந்து வீணைவாசித்தலையுங் கைவிட்டுப் பாடாமல் ஓய்ந்திருந்தேன்.

என்னை இந்த நிலையிற் கண்ட என் மாமனார் தாமடைந்த ஆனந்தத்தையும் விட்டுத் திடுக்கிட்டு, “ஏன் அம்மா, ஏதோ ஒரு வகையாய்க் கண்கலங்கி இருக்கின்றாய்?” என்று கேட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/74&oldid=1582032" இலிருந்து மீள்விக்கப்பட்டது