உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோகிலாம்பாள் கடிதங்கள்

53

வருகையைக் கண்ட அக்கனவானும் அவர்தம் மனைவியாரும் முகமலர்ச்சி யுடையவர்களாய் என்னைச் சுட்டித் தமக்குள் ஏதேதோ பேசிக் கொண்டனர்; அங்ஙனம் அவர்கள் பேசுகையில் அவர்களுக்கு முன்றோன்றிய முகமலர்ச்சிமாறி ஒருவகையான வாட்டந் தோன்றியது. இப்போது கைக்குழந்தையானது அவ்வம்மையார் மடிமேல் இருந்தது; அவரும் அவர் கணவரும் கிட்டக்கிட்ட உட்கார்ந்திருந்தனர். பெரிய பெண்பிள்ளையானது மற்ற மூன்று ஆண் குழந்தைகளையும் கையிற் பிடித்துக் கொண்டு, கரையோரத்திற் கடலலையானது ஓடிவரும் போது எதிரோடிக் கால்களைத் தண்ணீரில் நனைப்பதும், திரும்பிப்போன அலை மும்மரித்து வருகையிற் சிரித்துக் கொண்டு பின் ஓடி வருவதுமாக மிக்கமகிழ்ச்சியோடும் விளையாடிக் கொண்டிருந்தது. இந்த விளையாட்டிற் சிறிது இளைப்படைந்த பிறகு, தண்ணீர் வரும் முகமாய் ஒன்று மணலிற் குழிதோண்டுவதும், ஒன்று மணல்வீடு கட்டுவதுமாய் இருக்க மற்றொரு பிள்ளை அவ்வீட்டைக் காலால் எற்றிக் கலைப்பதும், தோண்டிய குழியிற் போய் நின்று கொள்வதுமாய் அவ்விருபிள்ளைகளையும் அழுகை மூட்டினது; பெரிய பெண்பிள்ளையோ மிக்க அன்போடும் திறமையோடும் துடுக்கான பிள்ளையைக் கண்டிப்பதிலும், மற்றிரு பிள்ளைகளை அழுகைதீர்த்து அமைதிப்படுத்திக் கூட விளையாடுவதிலும் சுறுசுறுப்பாய் இருந்தனள். நாங்கள் இவ்விடத்திற்கு வரும் முன்னெல்லாம் விளையாடிக் கொண்டிருக்கும் தம் அருமைக் குழந்தைகளைப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்த அப்பாரசிக கனவானும் அவர் தம் மனைவியாரும், எங்களைத் திரும்பப் பார்த்த பிறகு ஏதோ மனக்கவலை யுடைவர்களாய்ப் பிள்ளை களைப் பார்த்து மகிழாமல் ஆற்றாமை மிகுதியும் அடையப் பெற்றதோடு அவ்வம்மையார் என்னுடன் பேசுவதற்கு மிகுந்த விருப்பமுங் கொள்ளப்பெற்றாரென்று தெரிந்துகொண்டேன். முன் சொல்லியவாறு விளையாடிக் கொண்டிருந்த அக் குழந்தைகள் இப்போது அவ்விளையாட்டைவிட்டுக் கடல் மணலில் ஆங்காங்குப் புதைந்து கிடந்த கிளிஞ்சல்களைக் கிண்டிக் கிளறி எடுக்கத் தொடங்கின. இங்ஙனம் அவைகள் பொறுக்கிக் கொண்டு சுறுசுறுப்பாய் அங்கும் இங்கும் செல்கையில், அவற்றுள் ஒரு சிறு குழந்தை என் பக்கமாய் வந்தது; அது பொறுக்கிய கிளிஞ்சில்களை எடுத்துக் கொண்டு மேல் நிமிர்ந்த வுடனே என்னை ஏறிட்டுப் பார்த்தது; பார்த்ததும் அவர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/82&oldid=1582040" இலிருந்து மீள்விக்கப்பட்டது