உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோகிலாம்பாள் கடிதங்கள்

55

வந்ததும் அப்பாரசிக கனவான் என் மாமனாருக்கு வந்தனஞ் சொன்னார்.உடனே என் மாமனாரும் அவருக்கு நல் உபசாரங்கள் சொல்லித் தம் எதிரில் இருக்கும்படி கற்பித்தார். இனி என்னிடத்தில் நெருங்கிய அவர் மனைவியாருக்கு யான் வந்தனங்கள் சொல்லி அவர்களை என் அருகேயிருக்கும்படி கேட்டுக்கொண்டேன்.அவ்வம்மையாரும் அப்படியே இருந்தார்கள்.

உடனே அப்பாரசிக கனவான்.

66

அய்யா, நம்பளுக்கு மூத்த பெம்பிளப்பிள்ளே ஒருத்தி இருந்தா; அவ அச்சம் இந்தம்மாளேப்போலே இருந்தா; நம்ப துரதிர்ஷ்டம் அவ இப்போதா செத்துப்போனா; இந்தக் கைக் கொயந்தெரெண்டும் அவகிட்ட ரொம்ப ரொம்பப் பிரியம்; அதனாலேதா அந்தக்கொயந்தங்க இந்தம்மாவைப் பார்த்து அம்மாத்த ஆசையா அவுங்ககிட்டே வந்திருக்கு; என்ன செய்றது, பார்த்திங்களா நம்பளெக்காட்டிலுங் கொயந்தங்களுக்குப் பயக்கமானவங்க எடத்திலே அதிக வாஞ்சை என்று சிறிது துயரங் கலந்த குரலில் இந்துஸ்தானக்காரர் தமிழ்ப்பேசுகிற வகையாகக் கொச்சை கொச்சையாய்ப் பேசினார்.

இங்ஙனம் அவர் பேசியவுடனே அதனைத்தொடர்ந்து அவர் மனைவியார் என் மாமனாரைப்பார்த்து “தாதா சிறிது நேரத்திற்கு முன் நாங்கள் வண்டியிலிருந்து இறங்கிச் சாலையில் வரும்போது உங்களைப் பார்த்தோம்; இந்த அம்மா எங்கள் மூத்த மகளைப் போலவே இருந்தமையால் ஒரு பக்கம் துயரமும் ஒரு பக்கம் உங்களைக் கண்டு பேசவேண்டுமென்னும் ஆவலும் எங்களுக்கு உண்டாயின. ஆனால் இதற்குமுன் பழக்கம் இல்லாமை யால் நீங்கள் என்ன நினைத்துக் கொள்வீரகளோவென்று பேசாமல் வந்து விட்டோம். நல்ல காலமாய் இந்தக் குழந்தை களால் நாம் இங்கே சந்திக்கலாயிற்று. இறந்து போன என் அருமைமகளை இன்றைக்கு நாங்கள் திரும்பவும் பெற்றுக் கொண்டாற்போல இந்த அம்மாவைப் பார்த்து எங்களுக்கிருந்த ஆற்றாமையெல்லாம் நீங்கப்பெற்றோம். எங்களுக்காக இல்லாவிட்டாலும், இந்தப் பச்சைக் குழந்தை களுக்காகவாவது இந்த அம்மாவை எங்கள் கண்ணில் அடிக்கடி காட்டும்படி உங்களை மிகவுஞ் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்” என்று நல்ல செந்தமிழில் திருத்தமாகப் பேசிக் கையெடுத்துக் கும்பிட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/84&oldid=1582042" இலிருந்து மீள்விக்கப்பட்டது