உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

மறைமலையம் 16

தமிழ் கட்டுரைகள் எழுதி வந்தனர். அதன்பின் நாகபட்டினத்தி லேயே நடைபெற்ற ‘நாகை நீலலோசனி' என்னுங் கிழமைத் தாளுக்குப் பலப் பல கட்டுரைகள் எழுதி வந்தார். இவர் தமக்கு முதன் மகள் பிறந்த பின், குடும்பச்சுமையைத் தம் அன்னையார் மேல் வைத்தல் இனி ஆகாதெனக் கண்டு, 1894 ஆம் ஆ ண்டு ஆங்கிலக் கல்லூரிப் பயிற்சியை விட்டு விலகி, ஓர் அலுவலிற் புகுதற்கு முயன்றார்.

வி

அக்காலத்தில் திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில் அறிவு நூலாசிரியராயிருந்த திருச் சுந்தரம் பிள்ளை எம்.ஏ., அவர்கள், இயற்றிய ‘மனோன்மணியம்' என்னும் நாடகக் காப்பியத்தைத் தாம் பார்க்க நேர்ந்ததிலிருந்து, தம் இயற்றமிழா சிரியராகிய திரு. நாராயணசாமிப்பிள்ளை யவர்களிடஞ் சுந்தரம் பிள்ளை யவர்கள் இளந்தைப் பொழுதில் தமிழ்க் கல்வி பயின்றவர்களென்பது தெரிந்து, அவர்கட்குத் தம்மை பற்றியுந் தம் ஆசிரியரைப்பற்றியும் அகவற் பாவில் ஒரு கடிதம் வரைந்து விடுத்தார். அதனைக் கண்டு இறும்பூதுற்ற சுந்தரம் பிள்ளை யவர்கள் ஆசிரியர் நாராயணசாமிப்பிள்ளை யவர்களையும், மறைமலை யடிகளையும் திருவனந்தபுரத்திற்குத் தம் பால் வரும்படி விரும்பி அழைத்து ஒரு கடிதம் போக்கினர். அவ் வழைப்பினுக்கு மிக மனங்களித்துத் தம் ஆசிரியரும் இவருமாக 1895 ஆம் ஆண்டு நவம்பர்த் திங்கள் கடைக்கிழமையில் திருவனந்தபுரத்திற்குச் சென்று சுந்தரம்பிள்ளை யவர்களைக் கண்டார். இவர் அகவற்பாவில் எழுதிய கடிதத்தைக் கண்டு இவரை ஆண்டில் முதியராகக் கருதியிருந்த சுந்தரம்பிள்ளை யவர்கள் இவர் மிக இளைஞரா யிருத்தலை நேரிற் கண்ட வளவானே பெரிதும் வியப்புற்றுத் தாம் முன் எண்ணியதனை மொழிந்தார். ஒரு கிழமை வரையில் இவர் பிள்ளையவர் களோடு அளவளாவி யிருக்கையில் இவர் 'தொல்காப்பியம், 'பத்துப்பாட்டு,’ ‘கலித்தொகை' முதலான பழைய சங்கத் தமிழ் இலக்கண இலக்கியங்களிலுஞ், 'சிலப்பதிகாரம்,’ 'சீவகசிந்தாமணி' முதலிய காப்பியங்களிலும் வல்லுநராயிருத் தலை ஆராய்ந்து பார்த்து “இத்துணைச் சிறுபொழுதிலே இத்துணை யுயர்ந்த நூல்களை இவர் இவ்வாறு பயின்று தெளிந்தமை அரிதரிது!" எனப் புகன்று, அங்ஙனந் தாம் பாராட்டியதற்கு அடையாளமாக ஒரு நற்சான்று இதழும் எழுதித் தந்தனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/113&oldid=1583541" இலிருந்து மீள்விக்கப்பட்டது