உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140

மறைமலையம் 16

அதனை அகத்தடக்கி நூல்செய்த திருவள்ளுவனார்க்குங் கருத்தா மல்லது இதற்கு மாறாக அறத்திற்கு முதன்மை சொல்லுதலும் அதனை விட்டுப் பழவினைக்கு முதன்மை சொல்லுதலும் அவர்க்குச் சிறிதுங் கருத்தன்றாமென்பதூஉம் அம்மறுப்புரை காரர் உணரக் கடவாராக. “சிறப்பீனுஞ் செல்வமுமீனும்” என்னுந் திருக்குறள் அறஞ்செய்தலால் வரும் பயன் உணர்த்துவதேயன்றி, இன்பத்தினும் பார்க்க அறமே சிறந்ததென அறத்திற்கு முதன்மை சொல்லாமையின் அதனை எடுத்துக் காட்டுதலால் அம்மறுப்புரைகாரர் கருத்து நிரம்பு மாறில்லை யென்றும் ஓர்க.

10. அன்பும் இன்பத்தையே நுதலும்

இனி, இன்பமே முதலென்பதற்குத் திருவள்ளுவனார் அருளிச் செய்த ‘அன்பு மறனும் உடைத்தாயின்' என்னுந் திருக்குறளை யாம் எடுத்துக்காட்டியது பொருத்த மில்லை என்றும், அஃது அன்புக்கே முதன்மை சொல்லுகின்ற தென்றும் மறுப்புரைகாரர் கூறியதனைச் சிறிது ஆராய்வாம். கணவனும் மனைவியும் ஒருவரோ டொருவர் அன்பு பூண்டொழுகுதல் எதனால் என்று உலகியலறிவு சிறிதுடையாரை வினாவினும்,அவர் அவர்க்கு விடைதருவர். தாம் நுகருங் காதலின்பத்தினைக் குறிக்கொண்டே அவர் தமக்குள் அன்புடையராய் ஒழுகுதல் இனிது விளங்கிக் கிடப்பவும், இது தானும் உணராது மறுப்பெழுதப் புகுந்தார்க்கு நல்லறிவு கொளுத்தும் வாயில் ஏது? மேலும், “மாயோன் மேய காடுறை யுலகமும்” என்னுந் தொல்காப்பிய அகத்திணை இயற் சூத்திரத்தில் உரையாசிரியர் நச்சினார்க்கினியர் “புணர்தலின்றி இல்லறம் நிகழாமையின்’ என்று கூறிய அரிய உரையையேனுந், திருவள்ளுவனார் இன்பத்துப் பாலிற் கூறிய,

“ஊடுதல் காமத்திற் கின்பம் அதற்கின்பங் கூடி முயங்கப் பெறின்”

என்னு மருமைத் திருக்குறளையேனும் அறிந்திருந்தன ராயின் அம் மறுப்புரைகாரர் இவ்வாறெல்லாங் கூறி இழுக்குறார். எனவே, அன்பு என்னும் முளை, காதலின்ப மென்னும் வித்தினின்றும் உளதாகக் காண்டலின் இன்பங் காரணமும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/165&oldid=1583754" இலிருந்து மீள்விக்கப்பட்டது