உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருத்தோவியம்

147

வேறுபாடு பற்றிப் பண்டை நாளில் தனித்தனி வகுக்கப்பட்ட மக்கட் கூட்டத்தாருட் டொழில் வேற்றுமை ஒன்றே யிருந்ததல்லாமல், அக் கூட்டத்தார் ஒருவரோ டொருவர் அளவளாய் உண்ணல் கலத்தல்களைச் செய்தலில் ஏதொரு வேறுபாடும் இருந்ததில்லை.

இனி, இத் தொழில் வேற்றுமையிலிருந்து, காலஞ் சல்லச் செல்லச் சில தொழில்கள் உயர்வாகவும் ஏனைச் சில தொழில்கள் தாழ்வாகவுங் கருதப்படலான காலந்தொட்டு, அவ்வக் கூட்டத்தார் தத் தம்மிலன்றிப் பிறரோடு உண்ணல் கலத்தல்களைச் செய்ய மறுத்தமையிற் ‘சாதி வேற்றுமை' உளதாயிற்று ஒழுக்கத்தால் உயர்குணத்தால் நல்லறிவால் மெய்யன்பாலன்றி, வெறும் பிறப்பளவால் தம்மை யுயர்த்தி ஏனையோரைத் தாழ்த்திப் பேசுஞ் சாதியிறுமாப்புப் பெரும் பாலும் இத் தமிழ்நாட்டின் கண்ணே தான் உண்டாயிற்று. இத்துணைக் கொடிய சாதி வேற்றுமை வடநாட்டின் கண் இல்லாமை அங்குச் சென்றார் யாவரும் நன்குணர்வர். இங்ஙன மெல்லாம் முன்னில்லாத சாதி வேற்றுமை பின்னுண்டான வரலாறுகளை, அரிய பெரிய நூன் மேற்கோள்களுடன் சாதி வேற்றுமையும் போலிச் சைவரும் என்னும் நூலில் விரித்து விளக்கியிருக்கின்றோம். அவற்றிற் கெல்லாம் விடைதர மாட்டாத அம் மறுப்புரைகாரர் ஒவ்வொரு கூட்டத்தார்க் குரிய ஒவ்வொரு தொழில் வரையறை யினை நுவலுஞ் சில தொல்காப்பியச் சூத்திரங்களை எடுத்துக் காட்டி, அவ்வாற்றால் தொல்காப்பியத்திலேயே சாதி வேற்றுமை சொல்லப் பட்டிருக் கின்றதென எளிதாகச் சொல்லி விட்டார்.

இவர் தம் அறிவின் திறத்தை என்னென்பேம்! தொல் காப்பியத்திற் சாதி வேற்றுமை கூறப்பட்டதென நாட்டப் புகுந்தவர், ஒரு வகுப்பினர் மற்றொரு வகுப்பினரோடு உண்ணல் கலத்தல்களைச் செய்யவில்லை யென்றாதல், அன்றிச் செய்யலாகாதென்றாதல், நுவலும் அல்லது கட்டளை தருஞ் சூத்திரங்களிருந்தால், அவற்றையன்றோ எடுத்துக் காட்டல் வேண்டும்? அவ்வாறு செய்தற்கு அந்நூலிற் சிறிதும் இடன் இன்மையால், அது செய்யமாட்டாராய் அவ்வவர்க்குரிய தொழில் வேறுபாடுகளை மொழியுஞ் சூத்திரங்களையே சாதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/172&oldid=1583787" இலிருந்து மீள்விக்கப்பட்டது