உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருத்தோவியம்

175

சிவபிரானையுஞ் சிவனடியாரையும் இடையறாது அன்பினால் வழிபட்டுப் பெரியராதல் வேண்டுமென்று மொழிந்து, தம்மை நல்லவராக்கிக் கொள்ளப் பார்க்கின்றார். சிவபிரானுக்கு அன்புள்ளார் எல்லா உயிர்களிடத்தும் எல்லா மக்களிடத்தும் அன்புபாராட்டுந் தன்மையராவர்; சிவனடியார்க்கு உண்மை யன்புள்ளார், திருநீறுஞ் சிவமணியுமாகிய புற அடையா ளங்கள் மட்டுமே உடையாரைக் காணினும் அவர்தம் பிறப்பு வரலாறுகளைத் தினைத்தனையும் ஆராயாது அவர்பாற் கரையிகந்த அன்புமீதூரப் பெறுவர். இதற்குப், பரிய புராணத்துப் போந்த நாயன்மார் வரலாறுகளே போதிய சான்றாம். சைவசமயாசிரியருஞ் சிவ அந்தண குலத்திற் பிறந்தருளியவருமான சுந்தரமூர்த்தி நாயனாரே,

“தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன் திருநீல கண்டத்துக் குயவனார்க்கு அடியேன்”

என்று அந்தணர் குலத்து அடியாரையுங் குயவர் குலத்து அடியாரையும் ஏதொரு வேற்றுமையுங் காணாது ஒருங்கு வைத்து வணக்கங் கூறினமையும் நினைவிற் பதிக்கற் பாற்றாம். இங்ஙனஞ் சிவனடியார் பால் உண்மையன்பு பூண்டு ஒழுகு வாரெவருஞ் சாதியுயர்வு தாழ்வு சிறிதும் பாராது அவர்க்கு அடியாராய்த் தொண்டு செய்து ஒழுகினமையே நூல் வழக்கானும் உலகவழக்கானும் நன்கறியக் கிடக்கின்றது; நாம் பெரியராதற்கு இங்ஙனம் அம்மறுப்புரைகாரர் சொல்லும் நெறிதனிலேயுங் கூடச் சாதி வரம்பைச் சிதைத்து அன்பினால் தாண்டுசெய்து ஒழுகும் விழுமிய ஒழுக்கமே புலனாகி நிற்கின்றதன்றே? ஆகவே, 'யானும் அறியேன் அவளும் பொய் சொல்லாள்' என்னும் பழமொழிக்கு அம் மறுப்புரைகாரர் இலக்கியமாய் நிற்கின்றார் கண்டீர்! இங்ஙனந் தான் கொண்ட கோட்பாட்டுக்குத் தானே மாறாய் நின்று, ஆன்றோர் கைக் கொண்ட உண்மையன் பொழுக்கத்தைத் தன்னையறி யாமலே தன் வாயிற் புலப்படுத்தி விடுத லில் அம்மறுப்புரை காரரன்றி வேறு எவர் வல்லார்!

இனி, அப்பர் சுந்தரர் பெரியரானபிற் செய்த செயல்கள் குற்றமுடையவாயினன்றோ நாம் அவற்றைப்போற் செய்த லாகாது? மற்று, அவை அன்பினையே குறிக்கொண்டு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/200&oldid=1583926" இலிருந்து மீள்விக்கப்பட்டது