உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருத்தோவியம்

191

இனி, விடல்வேண்டும் வேண்டிய வெல்லாம் ஒருங்கு என்னுந் திருக்குறளைத் தமது போலிக் கொள்கைக்கு ஒரு துணையாக எடுத்துக்காட்டிய அம் மறுப்புரைகாரர், ஆசிரியர் திருவள்ளுவர் தம் மனைவியாரோடிருந்து தவமியற்றிய உண்மை நிகழ்ச்சியினை மறந்துவிட்ட தென்னையோ? காதலிற் சிறந்த இல்லாளைத் துறந்துறைதலே ‘துறவு' என்பது அவர்தங் கருத்தாயின், தாம் அறிவுறுத்திய அறவுரைக்குத் தாமே மாறாக நடப்பரா? ஆதலால், ‘விடல்வேண்டும் வேண்டிய வெல்லாம்' என்று அவர் அருளிச்செய்த திருக் குறட் கருத்து, மறுப்புரை காரர் தாம் வேண்டியவாறு ஏற்றிக் கூறிய அப் புன்பொருன் பயப்பதன்று. பின்னை என்னையோ அதன் கருத்தெனிற்; கூறுதும், ‘அகலியை' என்னுந் தம் மனைவியோடிருந்து தவம் புரிந்த கௌதம முனிவரைச் சுட்டி,

“ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் இந்திரனே சாலுங் கரி”

(குறள் 25)

என்று அவரருளிச் செய்த திருக்குறளால் ஆசிரியர் கருத்து இன்னதென்பது நன்கு புலனாகா நிற்கும். தன்வழி நில்லாது, தாம் செல்லும் வழியே தன்னை ஈர்த்துச் சென்று பழி பாவங்களுட் படுப்பிக்கும் ஐம்புல அவாக்களே ஒருவனுக்குத் தீது பயந்து அவன்றன் பிறவிகளைப் பெருக்குவதாகும். துள்ளியோடும் புள்ளிமான் ஒன்றைக் கண்டு அதன் அழகை வியந்து இன்புறுவது குற்றமாகாது; அதனழகை வியந்து இன்புற்ற அவ்வளவில் அடையாது அதனைக் கொன்று அதன் தசையை வதக்கித் தின்னவேண்டுமென் றெழும் அவாவே தீதுடைத்தாம். இங்ஙனமே ஒரு வறியவன் தனக்கு ஒருநாட் கிடைத்த நல்லுணவைச் சுவைத்துண்டு இன்புற்றிருத்தல் குற்றமாகாது. அந் நல்லுணவைப் போலவே எந்நாளும் இன்சுவை யுணவு பெறவேண்டுமெனப் பேரவாக் கொண்டு, அதற்கேற்ற நன்முயற்சியு மின்றித், திருட்டுத் தொழிலால் அதனைப் பெற முயல்வதே தீதுடைத்தாம். இங்ஙனமே, தன் நிலையினையும் பிறர் நிலையினையும் மறந்து, எல்லா இன்பத்திற்கும் மேலான பேரின்பத்தைத் தரவல்லனான இறைவனையும் மறந்து, தன் உள்ளத்தான் வேட்கப்பட்ட பாருள் நுகர்ச்சியிலேயே ஒருவற்குக் கருத்து ஈடுபட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/216&oldid=1583962" இலிருந்து மீள்விக்கப்பட்டது