உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226

மறைமலையம் 16

பரிந்தளித்தான்' என்று பாணபத்திரர்க்கு இறைவன் திருமுகம் அருளிய திரு விளையாடலைக் குறிப்பிடுதலானுந் திருவால வாய்ப்பதிகத்திற்

குறிப்பிட்டதும் பாணபத்திரரையே யாமென்பது துணியப் படும். அற்றன்று, திருநீலகண்ட யாழ்ப் பாணர் திருவாலவாயிற் சென்று இறைவன் எதிரில் இசைபாட இறைவன் அவரது யாழை வைத்தற்குப் பொற்பலகை இடுவித்தானென்று பெரிய புராணங் கூறுகின்றமையின், ஈண்டுப் பிள்ளையார் 'பாணன் இசை பத்திமையாற் பாடுதலும் பரிந்தளித்தான்’ என்று குறிப்பிட்டருளியது தம்மோ டுடனிருந்த திருநீலகண்ட யாழ்ப்பாணர்க்கு இறைவன் பொற் பலகை இடுவித்ததனையே யாமெனின்; ஈண்டும் பெரியபுராணங் கூறும் வரலாறு கொள்ளற்பாற்றன்று, என்னை? பெரிய புராணத்திற்கு முதல் நூலாகிய, நம்பியாண்டார் நம்பி அருளிச் செய்த திருத்தொண்டர் திருவந்தாதியில் திருநீலகண்ட யாழ்ப்பாணர்க்கு இறைவன் பொற்பலகை இடுவித்தாரென்பது சொல்லப்படாமையின் என்பது. இவ்வாறு திருத்தொண்டர் திருவந்தாதியிற் காணப்படாத ஒருவரலாறு அதற்குப் பின்வந்த பெரியபுராணத்துட் காணப்படுதல் பெரிதும் ஐயுறற் பால தொன்றாம்.

மேலும், பெரியபுராணத்தின் மட்டுங் காணப்படும் அவ் வரலாற்றுக்கு மாறானதொன்று வேறோரு பழைய நூலிற் காணப்படுமாயிற் பெரியபுராணத்திற் சொல்லப்பட்ட அது பொருந்தாதென்பதே முடிபாம். யாங்ஙனமெனிற் காட்டுதும்: மதுரையிற் பாணபத்திரர் செல்வவளத்தாற் சிறந்து வாழ்தல் கண்டு அவர்க்கு உறவினரான ஏனைப் பாணரெல்லாம் அவர்மேற் பொறாமைகொண்டு அவரை வெறுப்ப, அதுகண்ட இறைவன் பாணபத்திரர்க்குள்ள பேரன்பைப் புலப்படுத்துவான் வேண்டிப் பெருங்காற்றோடு கூடிய பெருமழையினைப் பெய் விக்க அதற்குப் பின்வாங்காது நள்ளிருளினுங் காலாற்றடவிக் காண்டு கோயிலிற் சென்று இறைவனெதிரே வெள்ளத்தினும் நின்றபடியாய்ப் பாணபத்திரர் யாழினை இயக்கி இசைபாட அது கண்டு ஐயன் இரங்கி அவர் ஏறியிருந்து பாடுதற்கு ஓர் உயர்ந்த பொற்பலகை இடுவிக்க அவர் அதன்மேல் ஏறியிருந்து பாடினார். அவர் உறவினரும் அவரது பேரன்பின் பெருக்கி னையும் அவர்க்கு இறைவனருளிய திறத்தினையுங்கண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/251&oldid=1584006" இலிருந்து மீள்விக்கப்பட்டது