உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234

மறைமலையம் 16

ஈண்டுக் காட்டுவாம். இரண்டாம் மண்டிலத்தின்கண் உள்ள சூக்தங்கள் பலவற்றை இயற்றினவர் கிரித்ஸமதர்; மூன்றாம் மண்டிலத்தின் கட் பலவற்றை இயற்றினவர் விசுவாமித்திரர்; நான்காம் மண்டிலத்திற் பல இயற்றினவர் வாமதேவர்; ஐந்தாம் மண்டிலத்திற் பல இயற்றினவர் அத்திரி, ஆறாம் மண்டிலத்திற் பல இயற்றினவர் பரத்துவாசர்; ஏழாம் மண்டிலத்திற்பல இயற்றினவர் வசிட்டர்; எட்டாம் மண்டிலத்திற்பல இயற்றின வர் கண்வர்; ஒன்பதாம் மண்டிலத்திற்பல இயற்றினவர் ங்கிரசர்; பத்தாம் மண்டிலத்தில் உள்ளவைகள் முதன் மண்டிலத்தில் உள்ளவைகளைப் போலவே பலப்பலரால் இயற்றப்பட்டன.

இனி, இச் சூக்தங்களை இயற்றிய இருடியர்களால் வழி படப்பட்ட கடவுளரும் பலர்; அவருள் முதன்மண்டிலத்தின்கண் வழுத்தப்பட்ட கடவுளர் பெயர்மட்டும் ஈண்டெடுத்துக் குறிக்கின்றாம். அவர்: அகதி, வாயு, இந்திரன், வருணன், மித்திரன், அசுவினிகள், விசுவதேவர், சரசுவதி, மருத்துக்கள், ஆப்ரிஸ், ரிதுஸ், தூவஷ்டர், பிரஹ்மணஸ்பதி, சோமன், தக்ஷிணா, ரிபுக்கள், சவிதர், இந்திராணி, வருணாநி, அக்நாயீ, விஷ்ணு, பூஷன், அர்யமன், ஆதித்தியர், உருத்திரன், சூர்யன், அதிதி, ஸ்வநயன், பாவயவ்யன், ரோமசன், பிருகஸ்பதி, அசுவம், ரதி முதலியோராவர். முதன் மண்டிலத்து நூற்றுப்பதினொரு சூக்தங்களில் இரண்டு சூக்தங்களே உருத்திரனை வழுத்து கின்றன. இருக்குவேதம் முழுதும்உள்ள ஆயிரத்து இருபத் தெட்டு சூக்தங்களில் நான்கு சூக்தங்களே உருத்திரர்க்குத் தனியே காணப்படுகின்றன. ஏனை ஆயிரத்து இருபத்து நான்கு சூக்தங்களும் ஏனைக்கடவுளரை வழுத்துவனவா யிருக்கின்றன. அது நிற்க.

இவ் விருக்குவேத முதன் மண்டிலத்தின்கண் உருத்திர மூர்த்திமேற் கண்ணுவ இருடியாற் பாடப்பட்டிருக்கும் 43. ஆம் சூக்தத்தினை இங்கே தமிழில் மொழிபெயர்த்துத் தருகின்றாம். அது கடவுள் வாய்மொழியே யென்று சொல்லத்தக்கதான, அடையாளம் உடையதா என்பதை அன்பர்கள் கருத்தூன்றிப் பார்த்தல்வேண்டும். அச் சூக்தம் வருமாறு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/259&oldid=1584016" இலிருந்து மீள்விக்கப்பட்டது