உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254

மறைமலையம் 16

நோக்குங்கால், சிறு தெய்வங்களை வணங்கும் ஆரியர்களும் சிவபிரானை வணங்குந் தமிழ்ச் சைவர்களும் பாடிய வணக்கவுரைகளைப் பிற்காலத்தில் ஒருங்கு சேர்த்து ஆக்கிய ஆரியமொழி வணக்கவுரைத் திரட்டே “எசுர்வேதம்” எனப் பின்னையோரால் வழங்கப்படுவதாயிற்றென்க.

66

அற்றன்று, எசுர்வேதத்தைக் கூறிற்றிலராயினும், அதற்கு முதல் நூலாகிய இருக்குவேதப் பெயரை யெடுத்துப், ‘பண்டு இருக்கு ஒரு நால்வர்க்கு நீர் உரை செய்ததே' என்று திருவான்மியூர்ப் பதிகத்தில் திருஞானசம்பந்தப் பெருமான் அருளிச்செய்தலின், இருக்கின் வழிவந்த எசுர் சாம அதர்வண வேதங்களும் சிவபெருமானே அருளிச்செய்தனவாமென்பது பெறப்படுமெனின்; இத் திருப்பாட்டிற் போந்த இருக்கு என்னுஞ் சொல் இஞ்ஞான்று அப் பெயர் கொண்டு உலவும் ரிய இருக்கு வேதத்தையே குறிக்குமெனின் நல்லுணவு வேண்டியும், ஆடுமாடுகள் மனைவி மக்கள் வேண்டியும் மழை வேண்டியும், பகைவரை யழித்தல் வேண்டியும் இவ்விருக்கு வேதத்தில் “இந்திரன்” மேற் பாடப்பட்டிருக்கும் இருநூற்றைம் பது பதிகங்களையும், இங்ஙனமே “வருணன்”, “மித்திரன்”, ‘விஷ்ணு”, முதலிய ஏனைச் சிறு தெய்வங்கண்மேற் பாடப் பட்டிருக்கும் ஏனைப் பல பதிகங்களையும் சிவபிரானே பாடினாரென்றன்றோ சொல்லல் வேண்டும்? சிவபிரானே முழுமுதற் கடவுளாயின் அவர் தம்மிற்றாழ்ந்த இந்திரன், வருணன் முதலான சிறுதெய்வங்களின் மேல் அங்ஙனம் பலப்பல பதிகங்களைப் பாடி, உண்டியும் உடையும் ஆடு மாடு மனைவி மக்களும் அவர்கள்பால் வேண்டிக் குறையிரத்தல் என்னை? இங்ஙனம் இத்தெய்வங்களையெல்லாம் வேண்டியும் உணவு கிடையாமையாற் பசித்துன்பத்திற்கு அஞ்சித்தான் அவர் நஞ்சை யுண்டனரோ? விஷ்ணு மாடு மேய்ப்பவராதலால் அவர் மட்டும் இரங்கி அவர்க்கு ஒரு மாடு கொடுப்பச் சிவபிரான் அதனை விட்டுவிட்டால் ஓடிவிடுமென நினைந்துதான் அதன்மேல் ஏறிக் கொண்டனர் போலும். மாட்டைத்தான் அவர் கொடுத்தார்; உமைப்பிராட்டியை அவர்க்கு மனைவி யாகக் கொடுத்தவர் யார்? இருக்கு வேதத்திற் காணப்படந் தெய்வங்களுள் எதுவும் அவர்க்கு மனைவியை யாவது மக்களையாவது கொடுத்ததை நாம் அறியக்கூட வில்லையே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/279&oldid=1584040" இலிருந்து மீள்விக்கப்பட்டது