உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260

மறைமலையம் 16

எழுதுதல் இயலுமோ? எல்லா வகையான மக்களும் வந்து நிறைந்த ஓரவைக்களத்தில் ஆரியத்திற்சொற்பொழிவு நிகழ்த்தி அதனை அங்குள்ளாரெல்லாரும் உணரும்படி செய்தல் இயலுமோ? மழலைச்சொற்பேசும் எந்தச் சிறுமகாரோ டேனும் ஆரியத்தில் உரையாடி மகிழ்தல் வாய்க்குமோ? வாயாதன்றே. இவ்வாறு உலக வாழ்க்கைக்கண் உள்ள எந்த மக்கட் கூட்டத்தாரேனுந் தமது வாழ்க்கையை நடத்துதற்குப் பயன்படு கருவியாக ஆரியமொழியினை வழங்கக் காணா மையின் அவ்வாரியமொழி உலக வழக்கிலில்லாது இறந்து பட்ட மொழியேயாகுமல்லாமல், எண்ணிறந்த மக்களால் தமதுயிர் வாழ்க்கைக்குச் சிறந்த பெருங் கருவியாகப் பயன் படுத்தப்பட்டு வருந் தமிழ்மொழியைப்போல் உயிருடையதாக மாட்டாது.

பார்ப்பனர் சிலரும் அயலார் சிலரும் பல்லாண்டுகளாக வருந்திப் பயில்வதொன்றே கொண்டு ஆரியமொழியை உயிருடைய தென்று கூற அறிவுடையார் எவரும் ஒருப்பட மாட்டார். ஆரிய மொழியைப் போலவே உலகவழக்கிலின்றி இறந்துபட்ட ‘இலத்தீன்’, ‘கிரீக்கு’, ‘ஈபுரு' முதலான பண்டை மொழிகளையும் பயில்வார் ஆங்காங்கு உளரேனும், அதுபற்றி அவைதம்மை உயிருடைய மொழிகளென்று கூறுவாரெ வரையும் யாண்டுங் கண்டிலேம். உயிர்போன உடம்பை மணம்ஊட்டி அழியாமற் பாதுகாத்துவைத்து அதனைக் கண்டு ஆறுதல் எய்தும் அதற்குரியார் போல, உயிரில்லாத ஆரியம் முதலான மொழிகளையும் அவற்றிற் குரியார் அம் மொழிகளி லெழுதப்பட்ட நூல்களால் மணம் பெறச்செய்து அவற்றால் அவை தம்மை முழுதும் அழிந்தொழியா வாறு வைத்துப் பாதுகாத்து வருகின்றனரென்க. மற்றுத், தமிழ் மொழியோ அங்ஙனம் ஒரு சிலரால் வருந்திப் பாதுகாக்கப் படும் வெற்றுடம்பு அன்றாய், என்றுமுள தெய்வத்தன்மை வாய்ந்த உயிருடன் உலவுவதென்பதனைச் சிறுமகாரும் இனி துணர்வராகலின், நாடொறும் நம்மைக் கண்ணுங் கருத்துமாய் வளர்த்துவரும் எம் தெய்வத் தமிழ் அன்னையை இழித்துப் பேசி, இறந்துபட்ட ஆரியமாதை உயர்த்துப்பேசுவார்தம் மடமையையுங் குறும்பையும் என்னென்பேம்! அது நிற்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/285&oldid=1584046" இலிருந்து மீள்விக்கப்பட்டது