உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருத்தோவியம்

269

அக் காலத்திருந்த சான்றோர் எங்ஙனம் பொறுத்திருந்தார் என்று வினவுவது முறையாமோ?

இனிச் சைவத் திருமுறைகளுட் சேர்ந்த ‘திருமூலர் திருமந்திரம் சேக்கிழார் பெரியபுராணம் அருளிச்செய்த காலத்தில் “ஒன்றவன்றானே" என்னுஞ் செய்யுண் முதலாக மூவாயிரஞ் செய்யுட்களே உடையதா யிருந்ததென்பது, “ஒன்றவன்றான் எனவெடுத்து, முன்னியவப் பொருண்மாலைத் தமிழ் மூவாயிரஞ் சாத்தி” என்னுந் திருமொழியால் நன்கு விளங்கும். மற்று இக்காலத்திலோ அது, பின்வந்தோராற் செய்து சேர்க்கப்பட்ட நாற்பத்தேழு செய்யுட்கள் மிகுதியுமுடையதா யிருக்கின்றது. திருமூல நாயனார் காலந்தொட்டு மிக்கு விளங்கிய சான்றோரும் அடியார்களும் வேந்தரும் இவ்வாறு பிறர்செய்ய எங்ஙனம் இடங்கொடுத்தாரென்றும் வினவுவது முறையாமோ?

இனித், திருவள்ளுவ நாயனார் அருளிச் செய்த பழைய காலத்திலேயே பால் இயல்களும் செய்யுட்கள் இவ்வளவு என்னுந் தொகையுங் குறித்து வழங்கப்பெற்ற தெய்வத் திருக்குறளுக்கு உரையாசிரியர் பலர் அடுத்தடுத்துத் தோன்றி உரைவகுத்து வைத்தமையின், பிற்காலத்தவர் அதன்கட் பிற செய்யுட்களை இயற்றி இயைக்க இடம்பெறாமை கண்டு, ஓர் அதிகாரத்திற் குள்ளேயே செய்யுட்களைப் பற்பலவாறாய் முறைபிறழ்த்தி விட்டனர். இவ் வுண்மை, திருக்குறளுக்கு மணக்குடவர் எழுதிய உரையில் அதிகாரத்துச் செய்யுட்களின் வைப்புமுறை ஒருவாறாகவும், பரிமேலழகியார் உரையில் அவ் வைப்புமுறை வேறொருவறாகவும், இருத்தலே போதிய சான்றாம்.

இவ்வாறாகப், பிற்காலத்து வருவோர் பாக்களையும் உரைகளையும் இயற்றி முன்னுள்ள நூல்களில் நுழைத்து அவற்றைப் பெருகச் செய்தல் தமிழில் மட்டுமன்று; ஆரியம், கிரீக் முதலிய மொழிகளிலுள்ள பழைய நூல்களிலுங் காணப்படுகின்றது. வட மொழியில் மொழியில் இப்போதுள்ள வான்மீகி இராமாயணமும் மாபாரதமும் முதன் முதல் அவற்றை ஆக்கியோர் வகுத்த அளவினும் பின்னுள்ளோரால் எத்தனை யோ மடங்கு பெருக்கி எழுதப்பட்டன வாகு மென்றும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/294&oldid=1584055" இலிருந்து மீள்விக்கப்பட்டது