உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சிந்தனைக் கட்டுரைகள்

39

அப் பொற்றைமலையின்கீழ் இறங்குதற்கு இருபுறத்துங் கோரைப்புற்கள் வளர்ந்த ஒரு சிறு வழி உண்டு. அவ்வழியே இறங்கிக் கீழ்ச்சென்றால் எதிரே ஒரு சிறு குன்று இருக்கும். இக்குன்று ஒரே மொழுக்கனான கருங்கற் பாறையினாற் சமைந்திருக்கின்றது. மேலேறுதற்குச் சிறிய படிக்கட்டுகள் வெட்டப்பட்டிருந்தமையால், இதன்மே லேறிப்போயினேன். இதன் உச்சியில் உள்ள கற்பிளவில் உண்டான ஒரு சுனையிற் பளிங்குபோல் தெளிவான நீர் நிரம்பி யிருந்தது; மேலும், இச் சுனையில் ஒரு புதுமை காணப்பட்டது; ஒருநாள் மாலைக்காலந் துவங்கி மறுநாள் விடியற்காலம் வரையில் இதில் ஓயாமல் நீர் ஊறிச் சுரந்து நிரம்பித் துளும்பிக் கீழே வழிந்து ஓடும். காலையில் ஏழு மணிக்கு மேற்பட்டால் நீர் ஊறிச் சுரப்பதில்லை. தனைப் பார்த்து வியந்து காண்டு அதனினின்றும் இறங்கிச் சிறிய கூழாங்கற்கள் சிதறிக்கிடக்கும் அம்மலையடிவாரத்திலுள்ள சுற்றுவழிப் பக்கமாய்ச் சிறிது வழி நடந்து போனாற், காட்டுமரங்கள் தொகுப்புத் தொகுப்பா யி க்கும் ஓரிடத்திற் கான்யாறு ஒன்று ஓடிவருகின்றது. அவ்வியாற்றில் நான் ஒருநாள் தலை முழுகச் சென்றபோது, வானுலகத்தினின்றும் வழுவி வீழ்ந்த மின்னற் கொடிபோல் நாலைந்து மகளிர் நீரில் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களைப் பின்னுந் திரும்பிப் பார்க்கையில் அவர்கள் மேலாடையின்றி இடுப்பளவு நீரில் நிமிர்ந்து நின்றுகொண்டு என்னை நோக்கினர்; அவர்களைப் பார்ப்பதற்கு நாணித் தலை கவிழ்ந்து கொண்டு யான் அப்புறம் மறைவாய்ப் போய் விட்டேன். போய்க் கரையிற் கொடி பிணைந்து அடர்ந்திருக்கும் ஒரு மரங் கோணி நீரளவுஞ் சென்று மேற் கவிந்திருந்தமையால் நிழல் உள்ளதொரு துறையில் இறங்கித் தன்னந் தனியனாய்த் தலை முழுகினேன்; அங்ஙனம் நிழல் செறிந்திருக்கும் அவ்விடத்தில் நீரோட்டம் மிகக் குளிர்ந்திருந்தது; கரிய வரால் மீன்கள் என்பக்கத்தே மேய்ந்து கொண்டு துவண்டு பாய்ந்தன; கரையையடுத்து வளர்ந்திருக்கும் நாணற் புதர் அண்டையில் இறா மீன்கள் துள்ளித்துள்ளிப் பாய்ந்தன; உழுவையுங் கெளிறும் நீர்மட்டத்துக்கு மேய்வது மிகவும் அழகாயிருந்தது; அப்போது நான், அரவஞ் செய்தால் அவை யோடிப்போமென் றெண்ணி, நீரில் மெதுவாக அமுங்கி அமுங்கி எழுந்து அவை தம்மை வியந்து நோக்கினேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/64&oldid=1583490" இலிருந்து மீள்விக்கப்பட்டது