உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சிந்தனைக் கட்டுரைகள் *

41

நிலவியற்கை பொருந்தக் கண்டு பாடும் நல்லிசைப் புலவர் களான கபிலர், நக்கீரர் முதலான ஆசிரியர் அருளிச் செய்த அருமைத் திருப்பாட்டுகளுடன் ஒத்துப் பார்த்து, அவை மிகவும் பொருட் பொருத்தமுடையனவாய் விளங்குதல் கண்டு வியந்தேன். இவ்வாறு பகற்காலங் கழிப்பி, மாலைக்காலம் அணுகுதலும் நானிருக்கும் பொற்றைமலைக்கு அருகாமையில் உள்ள சிறுகுன்றின்மேல் போய்ச் சேர்ந்தேன். சேர்ந்தபின், "மேற்றிசைப் பக்கமாய் வானிடத்தை நோக்கினேற்கு, முதன்முதல் அங்குச் சுடர்க்கொழுந்து விட்டுத் திகழும் பல்வேறு வகைப்பட்ட வண்ணங்களின் கொழுமையும் நிறத்தோய்ச்சலும் மிகவும் வியக்கத்தக்கனவாய்த் தோன்றின. இங்ஙனம் விளங்கிய செக்கர் வானம் வரவரச் சுருங்கி மழுங்குந்தோறும், வான் மீன்களுங் கோள்களும் ஒன்றன்பின் ஒன்றாய்த் தோற்றம் உற்று எழ எழக் கடைசியில் வானெங்கும் ஒரே வெளிச்சமாய்த் திகழ்ந்தது. அவ்வகன்ற வானின் நீலவண்ணங், காலத்தின் இயற்கையானும் அதன் வழியே சல்கின் மீன்கள் கோள்கள் முதலியவற்றின் கதிர் ஒளியானும் மிகத் திணிந்து சிறந்து தோன்றிற்று. அதன்கட் பொருந்திய மீன் தொகுதிகளோ மிகவும் அழகாய் வெண்மை யாய்த் தோன்றின. இவ்வியத்தகு வானக்காட்சியில் உள்ள ஒரு குறையினை நீக்க வெழுந்தாற் போல, நளியமிழ்தம்பொழி முழு மதியம் முகிற்குழாத்தின் இடையே பேரொளியுடன் தோன் றியது. ஞாயிற்றினாலும் முன்னே நமக்குக் காட்டப்படாத தாய்ச், சிலுசிலுவெனக் குளிர்ந்த ஒளிப் பிழம்பின் ஊடேஊடே நேர்த்தி யான நிழல்தோய் வித்து வனைந்ததான ஓர் உலகவியற்கைப் புதிய ஓவியத்தை இம்மதியந் திறப்பித்து என் கண்களுக்குக் காட்டியது.”

இங்ஙனம் இம் முழுமதியங் கதிரொளி துலங்க மீன் தொகுதியின் இடையே ஊடு அறுத்துக் கொண்டு இயங்கு தலைக் கண்டபோது, ஆழ்ந்து நுணுகி நினையும் இயல்புடை யரான சான்றோர்க்கும் பலகாற் கலக்கம் வருவித்து அவரை டர்ப்படுத்துவதான ஒரு நினைவு என்னுள்ளத்தில் எழுந்தது. தொல்லாசிரியர் ஒருவர் இங்ஙனமே ஒருகால் நினைந்து பார்க்கும்வழி,

66

வானும் வானில் வயங்கு மதியமும்

மீனும் நின்விரல் வேலையென் றாய்வுழி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/66&oldid=1583492" இலிருந்து மீள்விக்கப்பட்டது