உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

மறைமலையம் 16

முள்ளங்காட்டிற்குக் கரைவகுத்தாற்போல் இருக்கக் கண்டான். இனிமை வாய்ந்த அக்காட்டிடத்தை விட்டுப் புறப்பட்டு, அதனாற் சூழப்பட்ட திறந்த வெளியிற் புகுந்தபோது, தன் அருகே குதிரை வயவர் பலர் கடுகிச் செல்லக்கண்டு, அதன்பிற் சிறிதுநேரங் கழித்து நாய்க் கூட்டங் குலைக்கும் ஓசை கேட்டான். இதுகேட்டு முடிவதற்குட், பால் போலும் வெளியதொரு குதிரையுருவின் முதுகுமேல் ஓர் இளைஞன் அமர்ந்துகொண்டு, உரைக்கலாகாத விரைவுடன், தமக்கு முன் ஓடாநின்ற ஒரு முயலின் உருவினை வேட்டங்கொள்ளத் தொடரும் நூறு வேட்டை நாய்களின் ஆவிகளைப் பின்பற்றிப் பாய்ந்து செல்லக் கண்டான். அந்த வெள்ளைக் குதிரைமேற் போந்த இளைஞன் தன் மருங்கே அணுகியபோது அவனை நன்றாய் உற்றுப்பார்த்து, அவன்றன் அரும் பெருந் தன்மைகளை நினைந்து நினைந்து அமெரிக்க தேயத்து மேற்பகுதிகளில் உள்ளார் எல்லாரும் அப்போது எங்கும் புலம்புதற் கேதுவாய் அரையாண்டிற்குமுன் இறந்துபோன நிச்சராகவன் என்னும் அரசிளம் புதல்வனா யிருக்கக் கண்டான்.

இனி, அவன் அக்காட்டை விட்டு அகன்ற பின்னர்ப், பூக்கள் மிடைந்த வெளி நிலங்களையும், பசும் புன்னிலங் களையும், ஓடுகால்களையுங், கதிரவன் வெளிச்சம் படுங் குன்றுகளையும், நிழல்படர்ந்த பள்ளத் தாக்குகளையுங் கண்டு, தானறிந்த சொற்களா லாவது பிறர்க்குள்ள கருத்துக்களா லாவது அவற்றின் சிறப்பை விரித்துரைக்க லாகாதென எண்ணி உவப் பெய்தினான். இவ்வளவு இன்பமான இடத்தில் அளவி றந்த ஆவி உருக்கள் தத்தம் எண்ணஞ் சென்றவாறு தொகுதி தொகுதியாக விளையாட் டயர்தலுஞ் சிலம்பம் பழகுதலுஞ் செய்து உறைந்துவரலாயின. அவ் வாவிகளிற் சில ஓர் இருப்புச்சில்லை அங்கு மிங்குமாக எறிந்து கொண்டிருந்தன; வேறு சில ஒரு குறுந்தறியி னுருவத்தை ஊன்றிக் கொண்டிருந் தன; மற்றுஞ் சில ஒரு குதிரையி னுருவைப் பழக்கிக் கொண்டிருந்தன; இன்னும் பல இறந்துபோன கருவிகளின் (அமெரிக்க தேயத்து மக்கள் தாம் புழங்கிய கருவிகள் உடைந்தாயினும் எரிந்தாயினும் போனால் அவை இறந்தன வென்றே தங்கள் மொழியிற் சொல்லு கிறார்கள்) உருக்களைக் கொண்டு திறமை வாய்ந்த கைத் தொழில்கள் புரிவதிற் கூட்டங் கூட்டமாய்த் தலையிட்டிருந்தன. பெரு மகிழ்ச்சி பயப்பதான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/87&oldid=1583514" இலிருந்து மீள்விக்கப்பட்டது