உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

மறைமலையம் -17

அந்நகரத்தில் வந்து விலையானமையும், இற்றைக்குச் சிறிதேறக் குறைய இரண்டாயிர ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட பட்டினப்பாலையிலும் அதற்குச் சிறிது பிற்பட்ட சிலப்பதிகாரத்திலும் விளக்கமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன வல்லவோ? கிரேக்க நாட்டிலுள்ள யவனர்கள் தமிழ்நாட்டிற் போந்து தமிழக அரசர்களின் கீழ்ப் பல அலுவல்கள் பார்த்தமை பெருங்கதை, முல்லைப்பாட்டு முதலான பழந்தமிழ்ப் பாட்டுகளில் நன்கு குறிக்கப்பட்டிருக்கின்றது. இங்ஙனம் பண்டை நாளில் தமிழ் நாட்டார் அயல் நாடுகளிலும் அயல் நாட்டார் தமிழ் நாடுகளிலும் போந்து ஒருவரோடு ஒருவர் அளவளாவியிருந்தமை இனிது புலப்படுதலின் வேற்று நாட்டவர்க்குரிய மொழிகளின் சொற்களிற் சில தொன்று தொட்டே தமிழிற் புகுந்து வழங்குவதாயின என்று உணர்தல் வேண்டும். இவ்வாறு நேர்ந்த கலப்பின்றன்மையை ஆராய்ந்து உணர்வார்க்குத் தமிழர் பண்டைக் காலத்திலேயே நாரிகத்திற் சிறந்து விளங்கினாரென்பது புலனாகும்.

அங்ஙனமாயின், வேற்று நாட்டுச் சொற்கள் தமிழிற் கலந்தது போலவே, தமிழ்ச் சொற்களும் மற்றைத் தேய மொழிகளிற் கலந்து காணப்படுதல் வேண்டுமே யெனின், ஆம், தமிழ்ச் சொற்கள் பல பழைய மொழிகளிலும் புதிய மொழிகளிலுங் கலந்து வழங்கவே படுகின்றனவென்று கடைப்பிடிக்க. ஆணி மீனம் நீர் தாமரை கலை குடம் முதலான பல சொற்கள் ஆரிய மொழியிலும், அசை அருவி இரும்பு ஈன் எல்லாம் மேன்மை முகில் முதலான பலசொற்கள் ஆங்கிலம் இலத்தீன் கிரேக்கு முதலான ஐரோப்பியர் மொழிகளிலும், அவா இரு ஊர் எருமை சினம் செவ்வை முதலான பலசொற்கள் காலடி ஈபுரு முதலான மிகப் பழைய மொழிகளிலும், இன்னம் பல மற்றும் பல மொழிகளிலுமாக ஒருங்கு கலந்து காணப்படு கின்றன. அவையெல்லாம் இங்கெடுத்துக் காட்டப் புகுந்தால் இக் கட்டுரை மிக விரியுமாதலின் அவை தம்மை நுண்ணிய ஆராய்ச்சியாற் பல நூலுதவி கொண்டு அறிந்துகொள்க.

இவ்வாறு மொழிகள் ஒன்றோடொன்று கலக்கப் பெறுதற்கு அவற்றை வழங்கும் மக்களின் நாகரிகமே வழியா யிருத்தலால், நாகரிகம் வாய்ந்த எந்த மொழியும் பிறமொழிக் கலப்பில்லாமல் இருத்தல் இயலாது. அது மக்களியற்கை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/109&oldid=1584315" இலிருந்து மீள்விக்கப்பட்டது