உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

மறைமலையம் 17

வரையில் தூய்தாய் வழங்கி வளர்த்து வாழ்ந்துவந்த தமிழ் மக்களின் கால்வழியில் வந்தோரான நாம் நமது அருமைச் செந்தமிழ் மொழியைத் தூய்தாய் வழங்குதலில் எவ்வளவு கண்ணுங் கருத்தும் வைக்க வேண்டும்? அதற்காக நாம் எவ்வளவு முயற்சி யெடுக்க வேண்டும்! அங்ஙனமிருக்க, அதனைக் குறைபாடுடைய ஆங்கிலத்தோடு ஒப்பிட்டு, அதன் தூய்மையைக் கெடுத்து வடமொழி முதலான மற்றைமொழிச் சொற்களை அதன்கட் கொண்டு வந்து புகுத்தல் அதற்கு ஓர் ஆக்கமேயாம் என்று கூறுவார் உரை இப்போது அவர் அடைந்திருக்கும் அடிமைத்தன்மையைக் காட்டுகின்றதன்றோ? பண்டைநாளில் ஆரியப்பார்ப்பனருந் தமிழர்க்கு அடங்கி யிருந்து தமிழை வளர்த்தனர்; இப்போது அப்பார்ப்பனர் பல்வகைச் சூழ்ச்சிகளால் தமிழர்க்கு மேம்பட்டார் போற்றம்மைத் தாமே உயர்த்துக்கொண்டு, தமிழரைத் தங்கீழ் அடக்கி அடிமைகளாக்குதற் பொருட்டு மிக முயன்றும் அது முற்றுங் கைகூடாமையின், தமிழர்க்குரிய தமிழையாவது ஆரியம் முதலான பிறமொழிச் சொற்கள் சேர்த்துக் கெடுத்து வைத்தால் தங்கருத்து நிரம்புமென்றுன்னி அதனைப் பெரிதும் மாசுபடுத்தி வருகின்றார். அப்பார்ப்பனர் வலையிற் சிக்கிய தமிழ்ப் புலவர் சிலரும் அச் சூழ்ச்சியைப் பகுத்துணர்ந்து பாராது, ‘குலத்தைக் கெடுக்கவந்த கோடரிக்காம்பு' போல் அவ்வாரியப் பார்ப்பனரினும் பார்க்கத் தாமே தம் தனித் தமிழ் மொழியைச் சிதைத்தொழிக்க மடிகட்டி நிற்கின்றார்! ஐயகோ! பண்டு தொடங்கிப் புனிதமாய் ஓங்கி நிற்கும் நம் தனித்தமிழ்த் தாயைப், பிறமொழிச் சொற்களென்னுங் கோடரியினுள் நுழைந்துகொண்டு, இத் தமிழ்ப் புதல்வர் வெட்டிச் சாய்க்க முயல்வது தான் கலிகாலக் கொடுமை! இத்தீவினைச் செயலைப் புரியும் இவர்தம்மைத் தடுத்து, எம் தமிழ்த்தாயைப் பாதுகாக்க முன் நிற்கும் எம்போல் வாராது நல்வினைச் செயல் ஒருகாலுங் கலிகாலக் கொடுமை யாகாதென்று உணர்மின்கள் நடு நிலையுடையீர்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/129&oldid=1584341" இலிருந்து மீள்விக்கப்பட்டது