உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* அறிவுரைக்கொத்து

127

நூலையேயாம். வெளிப்பார்வையளவில் உயிர்கள் எல்லாம் ஒத்த செயலும் மாறுதலும் உடையனபோற் காணப்படினும் நுணுகி ஆராய்ந்தால் அவற்றின் அவற்றின் அறிவும் அறிவும் முயற்சியும் ஏற்றத் தாழ்வாகவேயிருக்கும். உண்ணல் உறங்கல் மருவல் சாதல் எல்லாவற்றிற்கும் பொதுவாயிருப்பினும் விலங்கினங்களில் இழிந்த பன்றியும் மக்களில் அறிவுடையன் ஒருவனும் ஒப்பாவர் என எவரேனுங் கூறுவரோ? மக்களில் அறிவுடையான் ஒருவனும் அறிவிலான் ஒருவனும் அங்ஙனமே உண்ணல் உறங்கல் முதலான தொழிலளவில் வேறுபாடில்லாதவர்போற் காணப்படினும், அறிவுடையான் தனக்குள்ளே அறிவின் பெருமையால் உயர்ந்தோனாதலும், அறிவிலான் தனக்குள்ள அறிவின் சிறுமையால் தாழ்ந்தோனாதலும் எல்லார்க்கும் உடன்பாடேயாகும்.

அஃது உண்மையென்றாலும், உலகநூற் கல்வியால் விளங்கும் அறிவுகொண்டு இம்மையில் எல்லா நலங்களும் பெறுவதாயிருக்க, இதற்கு மேலும் அறிவுநூற் கல்வி ஒன்று வேண்டுமென்பது எதன்பொருட்டோவெனின், உலக நூற்கல்வி ஒன்றே கொண்டு இம்மையிலும் மிகச் சிறந்த நலன்களைப் பெறுதல் இயலாது; இப்பிறப்பிற் பெறுதற்கரிய இன்பங் களையும் அறிவு நூற்கல்வியுடையார் எளிதிற் பெறுவர். கண்ணாற் கண்டுஞ் செவியாற் கேட்டும் வாயாற் சுவைத்தும் மூக்கால் முகர்ந்தும் மெய்யால் தொட்டும் ஐம்பொறிகளால் துய்க்கும் இன்பங்களிலுங்கூட அறிவு நூற்கல்வியால் உயர்ந்த அறிவு வாய்த்தவனுக்கு வரும் இன்பம், ஏனை உலக நூற் கல்விமட்டும் பெற்றவனுக்குத் தோன்றாது.

மிகக் கூரிய முனையையுடைய ஓர் இரும்புக்கோல் ஆழ்ந்த தோர் இடத்தையும் துளைத்துச் செல்லும்; முனை மழுங்கியதோ அதைப்போல ஆழ்ந்து செல்ல மாட்டாதாகும். உலக நூற்கல்வி சிறிது அறிவை விளக்குமேனும் அதனாற் செய்யப்படும் உலக முயற்சிகள் பலவும் மக்களுக்குப் பலவகைக் கவலைகளையுந் துன்பங்களையும் விளைவித்து அவரது அறிவை அலுப்படையச் செய்து மழுக்குமாதலின் அவர் ஐம்பொறி இன்பங்களையுங்கூடக் கூர்ந்து பார்த்துத் துய்க்க மாட்டார். அறிவு நூற்கல்வி யுடையார்க்கு நிகழும் அறிவும் முயற்சியும் அத்தகைய அல்லல்களை வருவியாமல் மேன்மேல் உள்ளக் கிளர்ச்சியினைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/152&oldid=1584373" இலிருந்து மீள்விக்கப்பட்டது