உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140

மறைமலையம் 17

வாறாய் மடங்கி மங்கிக் கிடக்கையில், அப் பொருட்டிரளை அவர்கள்பால் நின்றும் விடுவித்துப், பொதுமக்கட்குப் பயன்படுந்துறையில் இறங்கி முயலாமல் நம் நாட்டுத் தலைவர்கள், “நம் நாட்டுப் பொருள் மேல்நாட்டுக்குப் போய்விடு கின்றதே!” என்று சொல்லி, ஆராய்ச்சியறிவு சிறிதுமில்லாத, சாதி வேற்றுமைச் சமய வேற்றுமைப் படுகுழியினின்றும் ஏற விருப்பமில்லாத நம் இந்திய மக்களை வீணே கிளப்பிவிட்டு, இந்நாட்டுக்குப் பலவாற்றாற் பெருந்தீமைகளை உண்டு பண்ணுதல் நன்றாகுமா என்பதனை எண்ணிப் பாருங்கள்!

நம் நாட்டவர் கையிற் பொருள் கிடைத்தால் அது நம் பொது மக்கட்குப் பயன்படப் போவதில்லை! நகைக்குந், துணிக்கும், ஊர்திகட்குஞ், சாதியிறுமாப்புச் சமய இறுமாப்பு களைப் பெருக்குதற்கும், ஏழை எளியவர்களைக் கொடுமையாக நடத்துதற்குந், தீயவொழுக்கங்களை மிகுதி செய்வதற்கும் பார்ப்பனர்க்குக் கொடுப்பதற்கும், ஆங்கில மருத்துவஞ் செய்வார் செலவிற்கும், அழிவழக்காடுதற்கும், இன்னும் இவைபோன்ற தீயவற்றிற்குந்தாம் அவரது பொருள் பயன்படும்; அல்லது அவர் பொருள்மேற் பொருள் சேர்த்து வைத்துவிட்டுச் சாகப், பின்வந்தோர் அவற்றையழித்துப் பாழாக்குதற்கே பயன்படும்! இவைகளைத் தவிர வேறெந்த நல்ல துறையிலாயினும் நம் செல்வர்கள் தமது பொருளை மனம் உவந்து பயன்படுத்தக் கண்டதுண்டோ சொல்லுங்கள்!

மற்று, நமக்குப் புறம்பான மேல்நாட்டவர் கையிற் பொருள் சேர்ந்தால் அஃது எத்துணை நல்ல துறைகளிற் சென்று பயன்பட்டு, உலகிற் பரந்து விரிந்திருக்கும் எல்லா வகை யினரான மக்களையும் இன்ப அறிவு வாழ்க்கையில் வாழச்செய்கின்ற தென்பதைச் சிறிதுணர்ந்து பாருங்கள்!

மேல்நாட்டவர் ஒரே முழுமுதற் கடவுளை வணங்கு வதோடு, அவ்வொரு கடவுளை வணங்காமல் இறந்துபோன உயிர்களையும், மரங்கள் விலங்குகள் கட்டைகள் கற்கள் முதலானவைகளையும் அறியாமையால் வணங்கிப் பிழைபடும் ஏனைத் தேய மக்களிடத்து இரக்கமுடையவர்களாய்க், கோடி கோடியாகத் தமது பொருளைச் செலவு செய்து, கல்வி அறிவு ஆராய்ச்சியிற் சிறந்த தம் குருமார்களை நூறாயிரக்கணக்காய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/165&oldid=1584388" இலிருந்து மீள்விக்கப்பட்டது