உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவுரைக்கொத்து

145

ஈர நெஞ்சமின்றி ஒருவரையொருவர் வெட்டிச் சாய்க்கக் கங்கணங் கட்டி முனைந்து நிற்கும் இவர்கள் தாமா ஆங்கில அரசை நீக்கித் தாமாக அரசாள வல்லவர்கள்?

இங்ஙனந் தமக்குரிய சமய அறிவையுஞ் சமயாசிரி யரையுஞ் சமயநூல்களையுஞ் சமயவொழுக்கங்களையும் பெரிதாகக் கருதாமற், தாம் பிறந்த சாதியையே அவை யெல்லாவற்றினும் பெரிதாகக் கருதி நடக்குந் தமிழர்கள், தமக்குரிய தமிழ் மொழியிலாயினும் உணர்ச்சி வாய்ந்தவர் களாய் இருக்கின்றார் களோவெனின், அப்படியும் இல்லை. தமிழர் பத்தாயிரம்பேரில் ஒருவர் இருவர்க்கே சிறிது எழுத்துக் கூட்டிப் படிக்கத் தெரியும்; தமிழறிவு செவ்வையாக வாய்ந்தவர்களைத் தேடப் புகுந்தால், நூறாயிரவர்க்கு ஒருவர் இருவரே காணப்படுவர். இங்ஙனம் மிக அரியராய்க் காணப்படுந் தமிழ் கற்றாரிற் பெரும்பாலார்க்குள்ள அறிவு நிலையாவது, தமிழ் கல்லாத ஏனையோர்க்கு உள்ள அறிவு நிலையினுஞ் சிறந்ததாகக் காணப்படுகின்றதோ வென்றால், அப்படியும் இல்லை. கல்லாதவர்க்குளுள் சாதியிறு மாப்பும் மடமைக் கொள்கைகளுங் கற்றவரையும் விட்டு நீங்கிய பாடில்லை. கற்றவருங் கல்லாதார்க் கிணங்கி அவர் வழிச் செல்லக் காண்கின்றோமேயன்றிக், கற்றவர் தாங்கற்ற கல்வி யறிவாற் கல்லாதாரைத் திருத்தி அவரைத் தம்வழிப்படுக்கக் காண்கின்றோம் இல்லை.

தமது தனிச் செந்தமிழ் மொழியில் அன்பு அறிவு அருளொழுக்கங்களை விரிக்கும் நூல்களும், அரசர்கள் அடியார்கள் கற்றவர்களின் உண்மை வரலாறுகளைத் தெரிவிக்கும் பாட்டுகள் காப்பியங்களும், இறைவனைக் கண்டு அவனைக் குழைந்து உருகிப் பாடிய சமயாசிரியர் தந்த திருப்பதிகங்களும் நிரம்பிக் கிடக்க, அவற்றின் அருமை பருமையறியாமல், தமிழ் நூல் நலத்திற் றினையளவும் வாயாது பொய்யும் புரட்டுங் கொலைபுலை கட்குடியும் மலிந்த ஆரிய நூல்களைத் தாம் சிறிதும் ஆய்ந்து பாராதிருந்தும், அவற்றை ‘வேதம்’ ‘மிருதி’, ‘இதிகாசம்’, ‘புராணம்” என்று உயர்த்துப் பேசி அவைதம்மை இறைவன் அருளிச் செய்தனவாகப் பாராட்டித் தாம் கற்ற தமிழையும் தமிழ் நூல்களையும் இழித்துப் பேசுந் தமிழ்ப் புலவரின் அறிவுநிலை எத்தகையதென்பதை எண்ணிப் பாருங்கள்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/170&oldid=1584394" இலிருந்து மீள்விக்கப்பட்டது