உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164

மறைமலையம் 17

விளைவித்து வருதலோடு, கல்விப் பொருளையும் எங்கும் பரவச் சய்து மக்கள் மன அறிவையுந் துலக்கி வருகின்றார்கள். தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் உள்ள தமிழ் வணிகர்களோ பெரும்பாலுங் கல்வியில்லாதவர்களாயுங் கல்வியைப் பரவச் செய்தலிற் கருத்து இல்லாதவர்களாயும் இருக்கின்றார்கள்! இவர்களது இந்நிலைமை பெரிதும் வருந்தத்தக்கதன்றோ? அழியாச் செல்வமாகிய கல்வியைப் பெறாதவரையில் அழியுஞ் செல்வமாகிய பொருளைப் பெற்று யாது பயன் அடைவர்?

இனிக், கல்வியில்லாதவர்க்கு அறிவும், அறிவில்லாத வர்க்கு அன்பும் உண்டாகாமையால், இவ்விரண்டு மில்லாதவர்கள் ஒன்று சேர்ந்து ஒரு பெரிய வாணிகத்தைச் செய்து ஒற்றுமையாய் வாழ்ந்து புகழையும் புண்ணியத்தையும் அடைதல் நமது நாட்டில் அருமையாய் இருக்கின்றது. அறிவும் ஆற்றலும் உடையவரே தனிமையாய் இருந்து ஒரு பெரிய வாணிகத்தை நடத்தல் இயலாதாயின், அவ்விரண்டும் இல்லாதவர் அதனை நடத்துவது எப்படி?

ஒரு பெரிய வாணிகத்தை ஒருவர் ஏற்று நடத்துவது பல வகையிலும் அல்லலுக்கு இடமாகும்; வருகின்ற ஊதியம் முழுதும் நாமே அடைதல் வேண்டுமென்னும் எண்ணத்தால் தனியே வாணிகம் நடத்துவோர் பெரும்பாலும் ஊதியம் பெறாமற் பழுதுபடுவர்; ஓயாக் கவலையாலும் ஓயா முயற்சியாலும் ஊண் உறக்கம் இன்றி, ஆறுதல் சொல்வாரும் இன்றித், துணை செய்வாருமின்றித் துன்பத்திலேயே உழைப்பர்.

ஆதலால் தக்கவர் பலரைக் கூட்டாகச் சேர்த்துக் கொண்டு ஒரு பெரிய வாணிகத்தைச் செய்பவர்களே அத்துன்பங்களின்றும் விலகிப், போதுமான ஊதியத்தையும் இன்பத்தையும் பெற்றுத், தாம் மனமகிழ்ந்திருப்பதோடு, தம்மைச் சேர்ந்த கூட்டாளி களையும் அங்ஙனமே இன்புற்றுக் களித்திருக்கச் செய்வர். ஒருவரே ஒரு கற்பாறையைத் தூக்கிச் சுமப்பதென்றால் அஃது அவர்க்கு எவ்வளவு வருத்தத்தினைத் தரும்! அப்படியின்றிப் பலர் கூடி அதனை எடுத்துச் செல்வதென்றால் அஃது அவர்க்கு எத்துணை எளியதாய் இருக்கும். இதுபோலவே ஒரு பெருவாணிகத்தைப் பலர் கூடி நடத்துவது எளியதும் இன்பந் தருவதும் ஆம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/189&oldid=1584426" இலிருந்து மீள்விக்கப்பட்டது