உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவுரைக்கொத்து

181

இளந்தைக் காலந்தொட்டே தக்கவர்களை அணுகிச் சிறந்த நூல்களைக் கற்றறிந்து தம்மறிவை வளர்த்துக் கொள்வதோடு பயன்படாத சொல்லும் பயன்படாத செயலும் தம்மிடத்தில் உண்டாகாதபடி நிரம்பவுங் கருத்தாய் நடந்து கொள்ளுதலும் வேண்டும்.பெண் மக்களுக்குள்ளே வீணானவர்களுடன் பழகும் பழக்கத்தின் வழியே அவர்களுக்கு உள்ள வீணான தன்மைகள் எல்லாந் தமக்கும் படியுமாதலால், அவர்களுடன் கலந்து பழகாதபடி தம்மைப் பாதுகாத்துக் கொள்வதும் உயர்ந்த நிலைமையினையும் உயர்ந்த புதல்வர்களையும் பெற விரும்பும் பெண் மக்களுக்கு இன்றியமையாத கடமையாகும். சிறுபோது முதற் பழகும் பழக்கம் நல்லதாயிருந்தால், அப்பழக்கத்திற்கு ஏற்றபடி மங்கையர் தாம் கருக் கொண்டிருக்குங் காலங்களில் நல்வினையும் நற்சொல்லும் நற்செயலுமுடையராவர்; சிறுபோதிற் பழகிய பழக்கந் தீயதாயிருந்தால் அதற்கு இசையவே அவர் கருக் கொண்டிருக்குங் காலங்களிலுந் தீய நினைவுந் தீய சொல்லுந் தீய செயலும் உடையவர் ஆவார்.

சிறுபொழுதில் உண்டான பழக்கத்தைப் பிறகு இடையிலே மாற்றிக் கொள்வது எளிதிலே முடிவதன்று. இதைப்பற்றி முதலிலேயுஞ் சிறிது பேசியிருக்கின்றோம். முள் நிறைந்துள்ள உடை கருவேல் முதலான மரங்களை அவை சிறு செடிகளாய் இருக்கும்போதே களைந்தெறிவது எளிதிலே முடியும்; அங்ஙனம் அப்போது களையப்படாமல் விடப் பட்டால், அவை பருத்து வளர்ந்து பின்னர் எளிதிலே அகற்றப்படாதனவாய் இருந்து துன்பத்தைத் தரும் அல்லவோ?

அதுபோலவே, சிறுபோதில் தீயபழக்கம் ஏறிவிட்டாற் கருக் கொண்டிருக்கும் காலத்தில் அதனை எவ்வளவுதான் நீக்க முயன்றாலும் அது நீங்காதாய் வந்து தாயையும் பிள்ளையையும் ஒருங்கே கெடுத்து விடுமென்று திண்ணமாய் உணரல் வேண்டும். மற்று, ஒரு தோட்டத்திற் சிறு செடிகளாய் வைத்துப் பயிராக்கிய தென்னை மா பலா வாழை முதலியன காலஞ் செல்லச் செல்ல மிகப்பெரியனவாய் வளர்ந்து, மிகத் தித்திக்கும் பழங்களைத் தந்து உண்பார்க்கு உடம்பையும் வளர்த்து இன்பத்தையும் விளைத்தல் போலச் சிறுபொழுதிலே தாய்மார்க்கு உண்டான நற்பழக்க மானது அவர் கருக் கொண்டிருக்குங் காலத்தும் அவரைத் தூயராய் வைத்து அவர் ஈனும் மக்களையும் பெறுதற்கரிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/206&oldid=1584453" இலிருந்து மீள்விக்கப்பட்டது