உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

மறைமலையம் 17

ஆனால், நம்மனோரிற் பலர் தாம் கோயிலுக்குச் சென்று கடவுளை ள வணங்குவதாக வெளியே பெருமை பேசிக் காண்டாலும், உண்மையில் அவர்கள் அவ்விடத்தைக் கோயிலாகவும் அதனுள்ளிருக்கும் திருவுருவத்தைக் கடவுளின் அருளுருவ அடையாளமாகவும் நினைந்து நடக்கின்றார் களென்று நம்மால் நம்பக்கூடவில்லை. ஏனென்றால், அவர்கள் கோயிலின் உட்சென்றால் அடக்க ஒடுக்கமும், ஐயன் திருவடியில் நினைவும் வையாமல், வீண் கதையும் வம்பு வழக்குகளும் மணச்சடங்கு பிணச்சடங்குப் பேச்சுக்களுந் தமக்கு முன் உபசாரஞ் செய்யவில்லையென்னும் வீம்புப் பேச்சும் பேசுப வராய் ஒருவரோடொருவர் சிரித்துப் பகடி பண்ணுதலிலும், அன்பர்கள் அருவருக்கத்தக்க இன்னும் பல வீணானவை களைச் செய்வதிலும் உள்ளத்தை வைத்துப் பெருங்குற்றங்களை மூட்டை மூட்டையாகத் தொகுத்து வைக்கின்றார்கள்.

ஐயோ! உலகத்திலே அழிந்து போகுஞ் செல்வப் பொருள் சிறிது உடையவர்களைக் கண்டாலும் அவர்கள் முன்னிலையிற் கைகட்டி வாய் புதைத்துச் செல்லும் மாந்தர்கள், அளவிறந்த உலகங்களையும் அவ்வுலகங்களில் உள்ள அளவற்ற பொருள்களையும் உடைய எல்லாம் வல்ல தலைவனான நம் ஆண்டவன் முன்னிலையிற் செல்லுங்கால் எவ்வளவு அடக்க ஒடுக்கமும் அன்பும் பணிவும் உடையராக இருத்தல் வேண்டும்! நம் தலைவராகிய கடவுள் இத்திருக்கோயிலினுள் எழுந்தருளி யிருக்கின்றாரென்று அவர்கள் உண்மையாகவே நினைத் திருந்தால், ஆ! இப்படியெல்லாஞ் செய்வார்களா! இதற்கு முன்னெல்லாம் இவர்கள் இங்ஙனம் அறியாமையாற் குற்றமாக நடந்தாலும் இனியேனுஞ் செருக்கற்று அடக்கமும் அன்பும் பணிவும் பூண்டு, ஐயன் முன்னிலையில் நெஞ்சம் நெக்கு நெக்கு உருகக் கண்ணீருங் கம்பலையும் உடையவராய் அவன் புகழ்பாடி அவனது திருவருட் பெருஞ்செல்வத்தைப் பெற்றுப் பிழைத்திடுவாராக!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/51&oldid=1584254" இலிருந்து மீள்விக்கப்பட்டது