உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* அறிவுரைக்கொத்து

35

மக்களும் என்று சொல்லப்பட்ட இந்த ஆறு வகையில் அடங்கிய உயிர்கள் அத்தனையுஞ் சீவர்களென்றே சொல்லப்படும்.

இனிக் காருணியம் என்பது அருள் அல்லது இரக்கம் என்னும் பொருளைத் தருவதாகும். இவ்விரக்கம் என்னும் உயர்ந்த குணமானது இது நல்லது இது தீயது என்று பகுத்துக் காணும் உணர்ச்சி வாய்ந்த மக்களிடத்து மட்டுங் காணப்படுகின்றதே யல்லாமல், மக்கள் அல்லாத மற்ற ஐந்து வகைப்பட்ட உயிர்களிடத்துங் காணப்படவில்லை. இவ்வைந்து வகை உயிர்களிற் சில பசியெடுத்த காலங்களிலெல்லாத் தம்மினுங் கீழ்ப்பட்ட உயிர்களைச் சிறிதும் இரக்கமின்றிக் கொன்று அவற்றின் உடம்பைச் சிதைத்துத் தின்னுகின்றன. ஆதலால், இரக்க குணம் மக்கள் அல்லாத மற்றைய உயிர்களிடத்தில் இல்லை என்பது இனிது விளங்குகின்ற தன்றோ?

இனி, இவ்விரக்க குணமென்பது எந்த உயிர்களிடத்து இல்லையோ அந்த உயிர்கள் எல்லாங் கொடிய வன்னெஞ்சமுங் கொலைத் தொழிலும் உடையனவாய் இருக்கின்றன. இரக்க குணம் எந்த உயிர்களிடத்து இருக்கின்றதோ அந்த உயிர்கள் இனியமென்னெஞ்சமும் எல்லாரும் விரும்பத்தக்க இனிய செய்கையும் உடையனவாய் இருக்கின்றன. இந்தக் காரணத் தினாலேதான் இரக்க குணம் இல்லா உயிர்களின் தன்மை விலங்கின்றன்மை என்றும் இரக்க குணம் உள்ள உயிர்களின் தன்மை தெய்வத்தன்மை என்றும் வழங்கி வருகின்றோம்.

இனி மக்களின்றன்மையோ இவ்விரண்டிற்கும் நடுவில் நிற்கும் இயல்பு வாய்ந்ததாய் இருக்கின்றது. பசிநோய் தீரும் பொருட்டுக் கொடிய வன்னெஞ்சம் உடையராய்ப் பிற உயிர்களிடத்துச் சிறிதும் இரக்கம் இன்றி அவற்றைக் கொலை செய்து அவற்றின் ஊனைத் தின்பவர்கள் விலங்கின்றன்மையை அடைகின்றார்கள். தமக்குக் கடும்பசி உண்டான காலத்துத் தம்முயிர்போல மன்னுயிரை எண்ணி அவற்றிற்குச் சிறிதுந் தீங்கு செய்யாமல் தமக்குக் கிடைத்த காய் கனி கீரை கிழங்கு பயறு முதலியவற்றை உணவாகக் கொண்டு எல்லாவுயிர்களிடத்தும் இரக்கம் வைத்து ஒழுகுபவர்கள் தெய்வத் தன்மையுடையராகின் றார்கள். எல்லா உயிர்களிடத்தும் இரக்கமுடையவரான ஆண்ட வனது பேரின்பத்தை நாம் நுகர வேண்டுமாயின் அவர்போல் அளவிறந்த இரக்க குணமாகிய தெய்வத் தன்மையை அடைதல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/60&oldid=1584263" இலிருந்து மீள்விக்கப்பட்டது