உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* அறிவுரைக்கொத்து

39

என்னுந் திருமொழியே சான்றாகும். இன்னுங் கொல்லாதவர் களைக் கொல்லச் சொல்லியும், புலால் தின்னாதவர்களைத் தின்னச் சொல்லியுங் கட்டாயப்படுத்தினவர்களெல்லாரும் நிரயத்திற் சேர்வார்களென்று காசி காண்டம் கூறுகின்றது.

“எவ்வுயிரும் என்னுயிர்போல் எண்ணி இரங்கவும் நின், தெய்வ அருட்கருணை செய்யாப் பராபரமே!”

என்றபடி எல்லாவுயிர்களையும் நம்முயிர்போல் எண்ணி இரக்கத்தோடு நாம் நடக்க வேண்டும்.

நம் உடம்பில் ஒரு முள்ளுக் குத்தினாலும் ஒரு கத்தி வெட்டுப்பட்டாலும் நாம் எவ்வளவு துன்பத்தை அடைகின்றோம்! நம்மை ஒருவர் வெட்ட வந்தால் தப்பிப் பிழைக்க ஓடுகின்றோ மல்லேமோ? இங்ஙனமே ஆடு மாடு கோழி கொக்கு பன்றி மீன் முதலான உயிர்களெல்லாந் தம்மை ஒருவர் கொல்ல வரும்போது எவ்வளவு நடுக்கத்தோடு அஞ்சி ஓடுகின்றன! ஐயோ! அவற்றில் பல எவ்வளவு துன்பத்தோடு வாய்விட்டுக் கதறி அழுகின்றன! அவற்றின் கழுத்தை இரக்கமில்லாக் கொடியோர் கத்திகொண் டறுக்கையில் அவைகள் என்ன துடி துடிக்கின்றன! ஆ! ஆ! அவற்றின் துன்பத்தை நினைத்துப் பார்த்தால் நெஞ்சம் நீராய் உருகவில்லையா? ஐயோ, பாவம்! வாயற்ற அவ்வேழை உயிர்களைக் கொல்லவுங் கொன்றதைத் தின்னவும் பெண்பாலர் அஞ்சிக் கைவிட்டால் ஆடவர்கள் புலால் தின்பது ஒழியுமன்றோ!

நெடுநாளாக உயிர்களைக் கொன்று தின்று வந்த பாவச் செய்கையை நினைந்து இரக்கமுற்று நம் இறைவனாகிய தந்தை யிடஞ் சொல்லி மன்னிப்புக் கேட்டு எந்த உயிர்க்குந் தீங்கு ஞ் செய்யாமல் இரக்கம் பூண்டு ஒழுகுதலே மக்களுடைய கடமையாகும்.

“கொல்லா விரதம் குவலயமெல்லாம் ஓங்க

எல்லார்க்குஞ் சொல்லுவதென் இச்சை பராபரமே!”

என்னுந் தாயுமான அடிகளின் திருமொழிப்படி கொல்லா அறத்தின் மேன்மையை எங்கும் பரவச் செய்து அன்பும் இரக்கமும் உடையவர்களாய்த் தெய்வத்தன்மையை நாம் அடைந்து கடவுளுடைய திருவருளைப் பெறுதல் வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/64&oldid=1584269" இலிருந்து மீள்விக்கப்பட்டது