உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவுரைக்கொத்து

59

எல்லா அருளும் இரக்கமும் உடைய இறைவன் நமக்கு இந்தப் பிறவியைக் கொடுத்து வெறுஞ் சோறு தின்பதற்கும், பொருள் சேர்ப்பதற்குந்தானா? மற்றுற இந்த உடம்பைப் பாதுகாக்கு முகத்தால் அறிவை வளர்த்து அறியாமையைத் தொலைத்து அவனது பேரின்பத்தைப் பெறுதற்கன்றோ?

இம்மையின்பங்களைச் செவ்வையாயடைந்து மகிழ்ந் திருத்தற்குங் கல்வியறிவு கட்டாயம் வேண்டப்படுவதாகும். உயர்ந்த கல்வியறிவில்லாதவன் எவ்வளவு பொருளைச் சேர்த்து வைத்தாலும் எவ்வளவு உணவுப் பண்டங்களைத் தொகுத்துக் கொண்டாலும் அவற்றை நுட்பமாகத் துய்த்து மகிழும் வழியறியாமையால் துன்பத்திலேயே கிடந்துழன்று மாய்ந்து போவன். ஆகவே, இம்மையின்பத்தைப் பெற வேண்டுவார்க்குங் கல்வியறிவு முதன்மையாகுமென்பதை எல்லாருங் கருத்திற் பதித்தல் வேண்டும். ஆகவே, கைத்தொழிலையே பெரிதாக எண்ணி அதில் புகுந்தவர்களுங் கல்வியறிவைப் பெறுதற்கு இடையறாது முயலல் வேண்டும்.

மேன்

ஐரோப்பா முதலான அயல்நாடுகளிலுள்ள மக்களோ கல்வியறிவில்லாமல் எத்தகைய தொழிலையுஞ் செய்ய மாட்டார்கள். அவர்களில் எந்தத் தொழிலைச் செய்கின்றவர்களுங் கல்வியறிவிற் சிறந்தவராயே காணப்படு கின்றனர். அதனால், அவர்கள் நம்மனோர்க்கு நீண்டகாலம் பிடிக்கும் ஒரு கைத்தொழிலை மிகச் சுருங்கிய காலத்தில் சுருங்கிய செலவில் நேர்த்தியாகவுந் திறமையாகவுஞ் செய்து முடிக்கின்றனர்.

கல்வியறிவில்லா நம்மனோர் தம்மை வருத்தியும், வாயற்ற மாடு குதிரைகளை வருத்தியுஞ் செய்யும் ஒரு கைத்தொழிலை, ஐரோப்பிய நன்மக்கள் தமக்குள்ள கல்வியறிவால் அருமையான பொறிகளை (இயந்திரங்களை) அமைத்து, அவற்றினுதவியால் தமக்கும், பிற உயிர்க்குந் துன்பமின்றி இனிது முடிக்கின்றனர். இன்னுமிவர்கள் தங்களுக்குள்ள கல்வியறிவின் மேன்மையால் நாளுக்குநாள் எல்லா முயற்சியிலும் பிறைபோல் வளர்ந்தோங்கி வருதலையும், அஃதில்லா நம்மனோர் அம்முயற்சிகளில் குறைமதிபோல் தேய்ந்து போதலையும் அறியாதார் யார்? ஆகையால், எத்தகைய முயற்சிகளிற் புகுவோரும் முதலிற் கல்வியறிவைப் பெறுதலிற் கருத்தூன்றக் கடவராக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/84&oldid=1584290" இலிருந்து மீள்விக்கப்பட்டது