உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

மறைமலையம் 17

இத்துணைச் சிறந்த நெய்தற்தொழிலை அயல் நாட்டவர்கள் வியப்பான பல பொறிகளமைத்து நிரம்பத் திறமாக நடத்தி அளவிறந்த ஊதியத்தை எய்த, நம் நாட்டவர் களோ, கல்வி யறிவின்மையால் இதில் மிகவும் பிற்பட்ட நிலையினையடைந்து ஏழைகளாயிருக்கின்றார்கள். இனியா யினும், அவர்கள் அங்ஙனங் கல்வியை இகழ்ந்திராது, அதனைத் தாமுங் கற்றுத் தம் மக்கட்கும் கற்பித்து நெய்தற்றொழிலைச் செவ்வையாய் நடத்தி வாழ்வாராக!

இனி, உழவுத் தொழிலானும், நெய்தற்றொழிலானும் உண்டாக்கிய பொருள்களை ஒன்றற்கொன்று தொலைவாக வுள்ள பற்பல நாடுகளிலும் உள்ள மக்கட்குப் பயன்படும்படி சேர்ப்பித்தற்கு வாணிகமானது மிகவும் உதவி செய்வதாகும். இத்தொழில் நடைபெறாதானால் எல்லாரும் எல்லாப் பொருள்களையும் பெற்று இன்புற்று வா ழ்தல் முடியாது.

.

எந்தெந்த நாட்டில் எந்தெந்தப் பொருள்கள் நயமாய்க் கிடைக்குமென்பதை ஆராய்ந்தறிந்து, அவற்றை ஓரிடத்திற் றொகுத்துப் பலர்க்கும் பயன்படுத்தித் தாமும் பயனடைதற்குக் கல்வியறிவு கட்டாயம் வேண்டப்படும். வாணிகம் நடாத்து வார்க்குக் கல்வியறிவு அகத்தியமாய் வேண்டப்படுமென்பதை உணர்ந்த அயல் நாட்டவர்கள் கல்வியறிவிற் சிறந்தவராயிருக் கின்றார்கள். நம் நாட்டில் வாணிகம் நடாத்துகின்றவர்களோ எழுதப் படிக்கச் சிறிது தெரிந்தாற் போதுமென்று மனப்பால் குடித்துக் கல்வியில்லாதவர்களாய்க் காலங் கழிக்கின்றனர். இவர்களில் எவ்வளவு பணம் படைத்தவர்களாயிருந்தாலும், இவர்களைக் கல்வியறிவிற் சிறந்த அயல்நாட்டு வாணிகர்கள் ஒரு பொருட்படுத்துவதேயில்லை. இங்ஙனம் தாம் கல்வியறிவுடைய பிறரால் இகழப்படுதல் உணர்ந்தாயினும், இனிமேல், தாமும், தம் மக்களுந்தம்மினத் தவருங் கல்வியில் மேம்பட்டு விளங்க முயன்று அதனால் வாணிக வாழ்க்கையை எல்லாரும் புகழும்படி நடாத்திச் சிறப்பெய்துவாராக!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/87&oldid=1584293" இலிருந்து மீள்விக்கப்பட்டது