உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

மறைமலையம் 17

மேல்மேல் இன்பத்தைப் பெருக்கும் வழி வகைகளும் அவை தெரிந்து கொள்ள முடியாது. பிற உயிர்களுக்கு நன்மையாவது இது, தீமையாவது இது என்றும் அவை அறிவதில்லை.

இந்த உலகத்தில் நாம் ஏன் படைக்கப்பட்டிருக்கிறோம்? இந்த உடம்பு ஏன் நிலையாயிருப்பதில்லை? சிறிது காலத்தில் இந்த உடம்பு அழிந்து போக உயிர் எங்கே போகின்றது? இந்த உடம்பின் உறவால் வந்த பெற்றோரும் மனைவி மக்களும் உ ன் பிறந்தாரும் நேசரும் கற்றத்தாரும் சூழ்ந்து கொண்டிருக்கவும் இந்த உயிர் திடீரென்று இவர்கள் எல்லாரையும் விட்டு எங்கே போகின்றது? அப்படிப் போகும் உயிரை இவர்கள் ஒருவருந் தடுக்க மாட்டாதவர்களாய் அலறி வீழ்ந்து அழுவதேன்? எவராலுந் தடுக்க முடியாத இந்தப் பிறப்பு இறப்புகளை வகுத்தவன் யார்? இவற்றை வகுத்தவனது நோக்கம் யாது? பெருந்துன்பத்துக்கு இடமான இப்பிறப்பு இறப்புகளை நீக்கும் வழியாது? என்று இங்ஙனமெல்லாம் ஆராய்ந்து பார்க்கக்கூடிய உணர்ச்சியும், அவ்வுணர்ச்சியால் அடையத்தக்க பெரும்பயனும் விலங்குகளுக்குச் சிறிதும் இல்லை. மக்களாகிய நாமே இவைகளையெல்லாம் ஆராய்ந்து பார்த்து, அவ்வாராய்ச்சி யால் வரும் பயனை அடையத்தக்க உயர்ந்த நிலையில் இருக்கின்றோம்.

கிடைத்தற்கு அரிய இவ்வுயர்ந்த நிலையில் இருந்தும் இவ்வுண்மைகளை ஆராய்ந்து பாராமல், விலங்குகளைப்போல உண்பதிலும் உறங்குவதிலுங் காலங்கழித்து, வகை வகையான உடைகளை உடுப்பதும், பளபளப்பான நகைகளைப் பூண்பதும், மினுமினுப்பான வண்டிகளிற் செல்வதும், நாளுக்கு நாள் வளரும் புதுமைகளைக் காண்பதும், ஒன்றுக்குமேல் ஒன்று உயர்ந்த மணப்பண்டங்களை மோப்பதுங், கற்கக் கற்க இனிக்குங் கதைகளைக் கற்பதும் ஆகிய இவைகளே மக்கட் பிறவியினால் அடையத்தக்க பெரும்பயன்கள் என்று நம்மவர் நினைப்பார் களாயின், ஐயோ? அவர்கள் விலங்கினங்களினுங் கடைப் பட்டவர்கள் ஆவார்கள் அல்லரோ?

ஆதலால், நமக்கு அருமையாய்க் கிடைத்த பகுத் துணர்ச்சியை நாம் பலவகையான உயர்ந்த வழிகளிலும் வளரச் செய்து அதனால் அழியாப் பெரும் பயனை அடைதல் வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/91&oldid=1584297" இலிருந்து மீள்விக்கப்பட்டது