உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

மறைமலையம் 17

ஆனால், இக்காலத்திலோ முற்கூறிய துன்பங்களெல்லாம் ஒழிந்தன. எதனாலென்றாற், பகுத்துணர்ச்சியிற் சிறந்த ஜேம்ஸ் வாட் என்னும் ஒரு துரைமகன் நீராவியின் வல்லமையைக் கண்டுபிடிக்க, அவனுக்குப் பின் வந்த ஆங்கில அறிஞர் பலர் அந்நீராவியைக் கொண்டு வண்டிகளையுங் கப்பல்களையும் இடர்நேராமல் மிகு விரைவாக ஓட்டத்தக்க முறைகளைத் தெரிந்து கொண்டதனாலேயேயாம்.

ஆறு திங்கள் அல்லது ஓர் ஆண்டு மாட்டு வண்டியிற் சென்று சேர வேண்டும் ஊர்களை இப்போது நீராவி வண்டியில் ஏறி நாலைந்து நாட்களில் போய்ச் சேர்கின்றோம்; முன்னே ஐந்நூறு ரூபாய் ஆயிர ரூபாய் செலவழித்துக் கொண்டு போய்ச் சேரவேண்டிய இடங்களை, இப்போது நாற்பது, ஐம்பது ரூபாய்ச் செலவோடு போய்ச் சேர்கின்றோம். முன்னே வழியின் இடக்காலும், கொடிய விலங்குகளாலும், தீய கள்வர்களாலும் நேர்ந்த இடுக்கண்களெல்லாம் இப்போது இல்லையாயின. பெருங்கடல்களைத் தாண்டிச் செல்ல வேண்டிய நாடுகளை யெல்லாம் நீராவிக் கப்பல்களின் வழியாய்க் குறித்த காலத்திற் சுருங்கிய செலவில் இனிதாய்ப் போய்ச் சேர்கின்றோம். அந்நாடுகளிலுள்ள அரும் பண்டங்களை யெல்லாம் நாமிருக்கும் நாடுகளுக்கும் நம் நாட்டிலுள்ள விளைபொருள்களை அந்நாடுகளுக்குமாக ஏற்றுமதி இறக்குமதி செய்து, குறைந்த விலைக்கு அவைகளைக் கொண்டுங் கொடுத்தும் வருகின்றோம். பிற நாடுகளிற் புதியன புதியனவாக ஆக்கப்பட்டு வரும் நேர்த்தியான அரும் பண்டங்களைச் செல்வர்களேயன்றி, ஏழை மக்களும் வாங்கத் தக்கபடி அவைகள் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன.

அது மட்டுமோ! இலங்கையில் உள்ளவர்கள் இந்தியாவில் இருப்பவர்களோடும், இந்தியாவில் உள்ளவர்கள் இலங்கை யிலிருப்பவர்களோடும், ஒரு வீட்டுக்குள் இருப்பவர்களைப் போல் பேசிக்கொள்வதற்கு வாய்த்திருக்கும் வியப்பான வசதியை எண்ணிப் பாருங்கள்! இஃது எதனால் வந்தது? மின் வடி வடிவின் இயக்கத்தையும் அதனைப் பயன்படுத்தும் முறைகளையும் ஆங்கில அறிஞர்கள் தமது பகுத்துணர்ச்சியின் நுட்பத்தாற் கண்டுபிடித்தமையால் அன்றோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/95&oldid=1584301" இலிருந்து மீள்விக்கப்பட்டது