உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

மறைமலையம் -17

அருமைக்குரல் ஒலியும், அவர்கள் பாடிய இன்னிசைப் பாட்டுகளும் நம்மை விட்டு நீங்கிப் போகவில்லை.

எப்படி யென்றால், அமெரிக்க தேசத்திற் பகுத்தறிவிற் சிறந்து விளங்கும் எடிசன் என்னுஞ் துரைமகனார் ஆக்கிய ஒலியெழுதி (Gramophone) என்னும் பொறியானது, அப்பாவாணர்கள் பாடிய இன்னிசைப் பாட்டுகளையும் அவர்களுடைய இனிய குரலொலி களையும் அப்படியே பாடிக்காட்ட, அவைகளைக் கேட்டுக் கேட்டு நாம் வியந்து மகிழ்கின்றனம் அல்லமோ? அவ் இசை வாணர்கள் இறந்து போயினும் அவர்கள் பாடிய இசைகள் இறந்து போகாமல், நாம் திரும்பத் திரும்பக் கேட்டு மகிழும்படி பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கின்றன அல்லவோ?

இது மட்டுமா? எந்தெந்தத் தேயத்தில் எந்தெந்த மொழியில் எவ்வெப்பாட்டுகளை எவ்வெவர் எப்படி யெப்படிப் பாடினார்களோ, அவ்வப்படியே அப்பாட்டுகளை யெல்லாம் நாம் இருந்த இடத்திருந்தே கேட்டு இன்புறும் பெரும்பேற்றை இவ்விசைக் கருவியானது நமக்குத் தந்திருக்கின்றதன்றோ?

இத்தனை இன்பமும் நாம் எளிதில் அடையலானது எதனால்? எடிசன் என்னுந் துரைமகனார் தமது பகுத்துணர்ச் சியைச் செலுத்தி எவ்வளவோ அரும் பாடுபட்டு இவ் இசைக் கருவியைக் கண்டு பிடித்ததனாலன்றோ? அவர் தமது பகுத்துணர்வினைப் பயன்படுத்தாமல், மற்ற மக்களைப்போல் உண்பதிலும் உடுப்பதிலும் உறங்குவதிலுங் தமது காலத்தைக் கழித்திருந்தனராயின், நாம் அவ்வருமந்த இசைக் கருவியைப் பெறுதலும், நம் முன்னோர்களின் தித்திக்குஞ் சுவைப்பாட்டுகள், அயல்நாட்டு இசைவாணரின் பலதிற வரிப்பாட்டுகள் என்னும் இவைகளைக் கேட்டு மகிழ்தலும் இயலுமோ?

இன்னும் பாருங்கள்! நாம் படிக்கும் புத்தகங்களையும் அவ்வவ்வூர்களில் நடக்குஞ் செய்திகளையறிவிக்கும் புதினத் தாள்களையும் அச்சுப் பொறிகள் சிறிது நேரத்தில் ஆயிரக் கணக்காக அச்சுப் பதித்து நமக்குக் குறைந்த விலைக்குத் தருகின்றன. அச்சுப் பொறிகள் இல்லா முன்நாளிலோ இவ்வளவு எளிதாக நாம் விரும்பிய அரிய பெரிய நூல்களைப் பெற்றுக் கற்றுத் தேர்ச்சி அடைதல் ஏலாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/97&oldid=1584303" இலிருந்து மீள்விக்கப்பட்டது