உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

மறைமலையம் -18

பெருமழையும் கதுமெனத் தோன்றி, எமது மணற்குப்பத்தை வாரிக் கரைத்துக் கொண்டு போய்க் கடலின்கண் எம்மை அடங்க அமிழ்த்தி அழித்தால், அவரும் யானும் என் செய்யக் கூடும்! அல்லது இக்கடல் நீரே காற்றாலும், மழையாலும் வரை கடந்து பொங்கி எழுந்து போந்து எம்மையெல்லாம் ஒருங்கே அழித்துச் சென்றால், யான் என்னைக் காப்பதும் எம் உறவினர் சுற்றத்தாரைக் காப்பதும் எங்ஙனம் கைகூடும்! எல்லா மக்களையும், மக்களினும் தாழ்ந்த எல்லா உயிர்களையும் எவன் படைத் தானோ, அவனே அவர்களையும் அவைகளையும் காத்தற்கும் அழித்தற்கும் உரியவன். எல்லா உயிர்களையும் காத்தற்கு ஏற்ற பேராற்றல் எம் ஆண்டவன் ஒருவனுக்கு இருக்கப் பிற உயிர்களின் உதவியும் துணையும் இன்றிப், பிறபொருள்களின் சேர்க்கையும் பயனுமின்றி என்னையே காத்துக்கொள்ள மாட்டாத யான், என்னவரைக் காக்கும் கடமையுடையேன் எனப் பிழைபட எண்ணி, எல்லாம் வல்ல எம்பெருமானுக்கு இத்தனை காலமாகச் செய்துவந்த செயலினின்று இப்போது மாறப் பெறுவேனோ!" எனத் தொடர்பாக நினைந்தொரு முடிவுக்கு வந்தவுடனே, “என்றும் போல இன்றும் இப்பொன்மீன் எல்லாம் வல்ல பெருமான் திருவடிக்கே உரித்தாகற்பாலது!” என நெஞ்சம் குழைய மொழிந்து, அதனைக் கடலின்கண் விடுத்திட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/107&oldid=1584721" இலிருந்து மீள்விக்கப்பட்டது