உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

  • மறைமலையம் -18

36. கோட்டையைக் காத்த கோதை

கனடா நாட்டின் பிரஞ்சுக்காரர்க்கு உரிய 'வேர்ச்சேரி' என்னும் கோட்டையை 1690-ஆம் ஆண்டில் 'இருக்கோய வகுப்பினர் சிலர் வந்து தாக்கலாயினர். தாக்கவந்த அவர்கள் ஏதோர் அரவமும் செய்யாமல் மதின்மேல் ஏறி எளிதிலே உட்குதித்து விடுதற்கு ஏற்பாடு செய்துகொண்டு, அதன் படியே மதில்மேல் ஏறினர். ஏறியதும், உள்ளிருந்து போந்த துப்பாக்கிக் குண்டுகளைக் கண்டு, அவர்கள் வியப்புற்று, மதிலைக் கடக்கமாட்டாதவர்களாய்ப் பின்னடைந்தனர். திரும்பவும் அவர்கள் அம்மதின்மேற் செல்லத், திரும்பவும் போந்த துப்பாக்கிக் குண்டுகளின் முன் நிற்கமாட்டாத வர்களாய்த், திரும்பவும் பின்முதுகு காட்டினர். அக்கோட்டை யின் அகத்தே எவ்விடத்துங் காணப்பட்ட மாது ஒருத்தியைத் தவிர வேறு படைஞர் ஒருவரும் அதனுட் காணப்படா மையும், அங்ஙனமிருந்தும் பலமுகமாகத் துப்பாக்கிக் குண்டு கள் வந்து வீழ்ந்தமையும் நினைந்து அவர்கள் பெரிதும் இறும்பூதுற்றனர். பெண்பாலரைத் தவிர வேறு எவராலும் அக்கோட்டை காக்கப்படவில்லை என்னும் செய்தியே, அவ் இருக்கோய வகுப்பினர் அடுத்தடுத்துப் படைமேற் கொண்டு வந்து அக்கோட்டையைத் தாக்கும்படி செய்தது. தாக்கியும் என்! தாக்கிய ஒவ்வொரு முறையும் அவர் தோல்வியடைந்தனரே அன்றிச் சிறிதும் வெற்றி பெற்றிலர். கடைசியாக அவர்கள் இரண்டு நாள் வரையில் அக்கோட்டையை முற்றுகையிட்டும், அதனைப் பிடித்துக் கொள்ள மாட்டாதவர்களாய்ப் பின் வாங்கியே போயினர். இவ்வாறு மறித்து மறித்தும் வந்து அக்கோட்டையைத் தாக்கிய அவர்களை உட்புகவிடாமல் உள்நின்று எதிர்த்து முதுகுகாட்டி ஓடச் செய்தவள் கோதை ஒருத்தியே ஆவாள். இந்த அம்மை, ஒரு முழுப்படையின் துணை கொண்டவள் போல் அஞ்சா ஆண்மையுடனும்

.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/129&oldid=1584743" இலிருந்து மீள்விக்கப்பட்டது