உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

மறைமலையம் 18

39. ஓர் அரசியல் தலைவரின் அரிய இயற்கை

மிகவும் ஏழ்மையான நிலைமையிலிருந்து தையல் வேலை செய்து பிழைத்து வந்தவரான ‘அந்துரு சான்சன்' (Andrew Johnson) என்னும் ஆண்மகனார் தமது அறிவாற்றலாலும் தமது நல்லியற்கையின் விழுப்பத்தாலும் படிப்படியே தமது வாழ்க்கை நிலை உயரப் பெற்று கடைசியாக வட அமெரிக்காவின் கண்ணதான இணைக்கப்பட்ட நாட்டரசுக்குத் தலைவராம் த சாலப் பெரிய நிலையை அடைந்தனர். ஒருகால் ஓர் ஊரின்கண் ஒரு பெருங்கூட்டத்தின் இடையே அவர் ஒரு பேரூரை நிகழ்த்துங்கால், தாம் அரசியல் துறைகளில் எவ்வெவ்வாறு ஊழியம் செய்து எவ்வெவ்வகையில் மேலுயர்ந்து வந்தனரோ அவ்வரலாறுகளையெல்லாம் முறையே சொல்லிக் கொண்டு வந்தனர்.அப்போது அக்கூட்டத்திலிருந்து ஒரு குறும்பன் “தையற் காரனாயிருந்து மேல் வந்தோ!” எனக் கூவினான். அதுகேட்ட அத்தலைவர் அவ்விகழுரைக்குச் சிறிதும் வருந்தாராய், அதனைச் சிறந்த பொருள் உடையதாகத் திருப்புவான் புகுந்து “எவரோ ஒரு துரைமகனார் யான் தையற்காரனாயிருந்ததைக் குறிப்பிடு கின்றார். அவரது சொல் என்னைச் சிறிதும் வருத்தாது; ஏனென்றால், யான் தையற்காரனாயிருந்த ஞான்று அத் தொழிலில் மிக்க திறமையுடையேன் என்று புகழ் படைத் துள்ளேன்; யான் தைத்துக் கொடுத்த உடுப்புகள் திருத்தமாய்ப் பொருத்தமாய் நறுவியவாய் இருந்தன; எனக்குத் தையல்வேலை கொடுத்தவர்கட்கெல்லாம் யான் சொன்ன சொற்படியே செய்து குறிப்பிட்ட நாளில் தவறாமல் கொடுத்து வந்தேன்” என எடுத்துரைத்தனர். இவரது பொறுமையுரையைக் கேட்டு அதன் அருமையை உணர்ந்த அப்பெரும் கூட்டத்தவர் எல்லாரும் அவரை மேலும் மிகுதியாய் கொண்டாடினரேயன்றி, அவரை அது பற்றிச் சிறிதும் குறைவாக நினைத்திலர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/135&oldid=1584749" இலிருந்து மீள்விக்கப்பட்டது